கட்டுரை பொருளடக்கம்.
- குலதெய்வம் அருள்மிகு மன்னன் கருங்காளி வாதை வரலாற்று முழுக்கதை.
- குலதெய்வம் அருள்மிகு குலைவாழை இசக்கி அம்மன் முழுக்கதை.
- குலதெய்வம் அருள்மிகு குலதெய்வம் வண்ணார மாடன் முழுக்கதை.
- குறைகளை தீர்க்கும் குலதெய்வ வழிபாடு.
குலதெய்வம் மன்னன் கருங்காளி வாதை வரலாற்றுக் கதையின் ஆரம்பம்.
முன்னொருக் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் மதுரைப் பதியை ஆட்சிபுரிந்து வந்தான் பாண்டிய மன்னனின் ஆட்சியில் தவறாமல் மழைப் பெய்து விவசாயம் செழித்து மக்கள் அனைவரும் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தனர்.
பாண்டிய மன்னனுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செழிப்புடன் நடைபெற்று அரண்மனை கஜானாவில் செல்வம் நிறைந்து வந்தது.
பாண்டிய மன்னன் நிலத்தில் நெல், பயிறு, மா , பலா, வாழை, இப்படி பல்வேறு பழங்கள், காய்கறிகள் என்று பல வகை விவசாயங்கள் செய்யபட்டது.
அதில் வாழைத்தோட்டத்துக்கு என்று தனியாக 21 காவலர்களை நியமித்தார் பாண்டிய மன்னன். அவர்களே அந்த தோட்டத்திற்கான நீர் பாய்ச்சுவது, களை எடுப்பது, காவல் காப்பது என அனைத்து வேலைகளையும் செய்து வந்தனர்.
சில காலம் மன்னன் வாழை தோட்டத்தின் பக்கம் சென்று கவனிக்கவில்லை. அமைச்சர்களும் காவலுக்கு ஆள் இருப்பதால் என்ன நடந்தாலும் அறிவிப்பு வரும் என்பதால் வாழைத் தோட்டத்தை கண்டு கொள்ளவில்லை.
இந்த சமயத்தில் ஒரு நாள் வாழைத்தோட்ட காவலாளிகள் 21 பேரும் வாழை குலைகளை திருடி விட்டதாகவும் மன்னவருக்கு தெரியாமல் அதை விற்றுவிட்டதாகவும் அரண்மனைக்கு தகவல் கிடைக்கிறது.
இந்த செய்தியை அறிந்த மன்னன் கடுமையான கோபம் கொண்டு அந்த காவலாளிகளை பிடித்துவர உத்தரவிடுகிறார்.
அரண்மனை காவல் படை ஆட்கள் அந்த 21 வாழைத்தோட்ட காவலர்களை மன்னர் முன் பிடித்து கொண்டு வந்து நிறுத்தினர். பாண்டிய மன்னர் அவர்களுக்கு தண்டனையாக நாட்டில் எந்த வேலையும் கொடுக்காமல் நாட்டை விட்டு விரட்டியடித்தான்.
உயிருக்கு பயந்து 21 வாழைத் தோட்ட காவலாளிகளும் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இந்த சம்பவத்தால் அரண்மனைக்கு சொந்தமான வாழைத் தோட்டங்கள் பயிரிடப்படாமல் சில ஆண்டுக்களுக்கு தரிசாக இருந்தது.
பாண்டிய மன்னனுடைய வாழைத் தோட்டங்களில் இந்த திருட்டு சம்பவம் நடந்து சில காலங்கள் ஆகிவிட்டது. இந்த சூழ்நிலையில் பாண்டியனுக்கு தீடீரென ஒரு நாள் அந்த வாழைத் தோட்டங்களில் மீண்டும் வாழை பயிரிட வேண்டுமென்று யோசனை தோன்றியது.
உடனே தனது அமைச்சரை அழைத்து ஆலோசனையும் கேட்டார் பின்னர் அமைச்சரிடம் பாண்டிய மன்னன் அமைச்சரே! அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் வேண்டிய காவலர்களை வரவழைத்து மீண்டும் அங்கு வாழை பயிரிடவேண்டும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்றான்.
மன்னரின் கட்டளைப்படி தோட்டத்தில் வாழை நடவு செய்யப்பட்டது. தோட்டத்தில் பச்சை வாழை, நாட்டு வாழை, மலை வாழை, நவரை வாழை, சர்க்கரை வாழை, செவ்வாழை, பூவன் வாழை, கற்பூர வாழை, மொந்தன் வாழை, நேந்திர வாழை, கரு வாழை, அடுக்கு வாழை, வெள்ளை வாழை, ஏலரிசி வாழை, மோரீஸ் வாழை, வெள்ள தொழுவன், மஞ்ச தொழவன், பச்சைத் தொழுவன் இப்படி அனைத்து விதமான வாழைகளும் நடவு செய்யப்பட்டது.
வாழைகளை நடவு செய்த பிறகு அமைச்சர் பாண்டிய மன்னனிடம் சென்று தோட்டத்தை காவல் காப்பதற்காக காவலர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
அதற்கு மன்னன் அமைச்சரே! இதற்கு முன்பு காவலுக்கு எப்போதும் 21 பேரை காவலுக்கு வைப்போம் ஆனால் சென்ற முறை காவலுக்கு இருந்தவர்கள் நமது தோட்டதிலேயே திருடி அந்த குலைகளை விற்பனை செய்து காவலாளிகள் திருடர்களாக மாறிவிட்டார்கள்.
நமக்கு துரோகம் செய்துவிட்டார்கள். இனி வாழை தோட்டத்தை காவல் காக்க புதிதாக காவல்காரர்களை நியமியுங்கள் என்றார் பாண்டிய மன்னர்.
உங்கள் விருப்பம் அப்படியே செய்கிறேன் மன்னா நல்ல காவலாளிகள் எங்கே கிடைப்பார்கள் என்று தூதுவர்களை அனுப்பி கேட்டு புதிய திறமையான காவலாளிகளை கொண்டு வருகிறேன் என்றார் அமைச்சர்.
எனவே அரசாங்க வாழைத் தோட்டத்திற்கு புதிய காவலர்களை தேடி தேடி கடைசியில் ஒரு வழியாக அமைச்சருக்கு நல்ல செய்தி கிடைத்தது உடனே பாண்டிய மன்னனை சந்தித்தார் அமைச்சர்.
மன்னா அடவி மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவலுக்கு பெயர் பெற்றவர்கள் அவர்களில் சிலரை நமது தோட்டத்திற்கு காவல் காக்க புதிய காவலாளியாக நியமிக்கலாம் என்றார் அமைச்சர் மன்னரும் சம்மதித்தார்.
அதன்படி அடவி மலைப் பகுதிக்குச் சென்று 21 புதிய காவலாளிகளையும் வாழை தோட்டத்தை காவல்காக்க அழைத்துவந்தனர்.
21 காவலர்களுக்கும் சம்பளமாக முதலில் போடும் வாழை குலைகள் அரசாங்கத்துக்கு உரியது என்றும் இரண்டாவது பயிரிட்டு அடுத்ததாக போடும் வாழை குலைகள் காவல் காக்கும் உங்களுக்கு என்றும் சம்பளம் பேசி முடிக்கப்பட்டது.
அதன்படி 21 காவலாளிகளுக்கும் வாழைத் தோட்டத்துக்குள்ளவே குடிசை போட்டு கொடுக்கப்பட்டது அதிலேயே அந்த இருபத்தி ஒரு காவலாளிகளும் தங்கி இருந்தனர்.
அந்த 21 காவலாளிகளும் தங்களுடைய குல தெய்வமான குலைவாழை இசக்கி அம்மனை அவர்கள் தங்கியிருந்த வாழை தோட்டத்தில் வைத்து பூசை செய்து வழிபட்டு வந்தனர்.
மேலும் கதையை படிக்கும் முன்பாக குலைவாழை இசக்கி அம்மன் கதையை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த கட்டுரையின் கீழே குலைவாழை இசக்கி அம்மன் கதை இருக்கிறது அதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் இப்பொழுது அருள்மிகு குலதெய்வம் மன்னன் கருங்காளி வாதையின் கதையை தொடர்ந்து தெரிந்துகொள்வோம்.
குலதெய்வம் மன்னன் கருங்காளி வாதை கதையின் தொடர்ச்சி.
இவ்வாறு வணங்கிவந்த குலைவாழை இசக்கி அம்மனை அடவி மலையை சேர்ந்தவர்கள் தங்கள் காவல் தெய்வமாகவும் குலம் காக்க வந்த குல தெய்வமாகவும் வணங்கி வந்தனர்.
அதன் காரணமாகவே இந்த 21 காவலாளிகளும் வாழைத் தோட்டத்தில் தங்களுடைய குடிசைகளுக்கு அருகில் குலை வாழை இசக்கி அம்மனை வைத்து வணங்கி வந்தனர்.
இவ்வாறாக அந்த 21 காவலாளிகளும் வாழைத் தோட்டத்தை காவல் காத்து வருகின்றனர். நாட்கள் மெல்ல நகரத் தொடங்கியது அந்த 21 காவலாளிகளும் வாழைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சி உரம் வைத்து காட்டு மிருகங்கள் பயிர்களை மேயாமல் கண்ணும் கருத்துமாக காத்து வந்தனர்.
வாழை மரங்களும் நன்றாக வளர்ந்து குலைகள் போட்டது. அவற்றை பார்த்த 21 காவலர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த குலைகளை மன்னன் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார். நிச்சயம் வெகுமதியும் தருவார் என்ற நம்பிக்கையோடு 21 பேரும் இருந்தனர்.
இந்நிலையில் தான் ஏற்கனவே வாழைத் தோட்டத்தை காவல் காத்து பின்னர் வாழை குலைகளை திருடி விற்ற குற்றத்திற்காக மன்னரால் நாட்டை விட்டு துரத்தியடிக்கபட்ட 21 காவலர்களும் இந்த விஷயத்தை அறிந்தனர்.
அவர்களில் ஒருவன் தன் தலைவனிடம் அண்ணே! காலங்காலமாக அந்த பாண்டிய மன்னனின் வாழைத் தோட்டத்தில் நாம்தான் காவல்காத்து வந்தோம்.
ஆனால் இப்போது வாழைத் தோட்டங்களை அமைத்து புதிதாக காவலர்களையும் நியமித்து பாண்டிய மன்னன் நமக்கு துரோகம் செய்துவிட்டான்.
அதனால் பாண்டிய மன்னனையும் அந்த புதிய 21 காவலர்களை நாம சும்ம விடக்கூடாது. நமக்கு கிடைக்க வேண்டிய வேலையை தட்டிப்பறித்த 21 காவலர்களை நாம் பழிக்கு பழிவாங்கியே தீர வேண்டும் என சொன்னான் ஒருவன்.
இதை கேட்டு கொண்டு இருந்த மற்ற காவலாளிகளும் இதற்கு சம்மதித்தனர் உடனே கூட்டத்திலிருந்து ஒரு திட்டத்தை சொன்னான் அண்ணே நாம் அனைவரும் இரவோடு இரவாக அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது தோட்டத்திற்குள் புகுந்து நாம் 21 பேரும் ஆளுக்கு ஒரு குலையை வெட்டி திருடிவிட வேண்டும்.
தோட்டத்தை காவல்காக்கும் புதிய காவலாளிகளும் 21 பேர் திருடும் வாழைக் குலைகளும் 21 ஆக இருக்க வேண்டும். இதனால் நிச்சயமாக பண்டியன் அவர்கள் மீது சந்தேகபடுவான் அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் பண்டியனுக்கும் இது பாடமாக இருக்கும் நம் மீது யாருக்கும் எந்தவித சந்தேகமும் வராது.
மேலும் வேறு வழியின்றி பண்டிய மன்னன் மீண்டும் நம்மை இந்த தோட்டத்திற்கு காவல் செய்ய அழைப்பார் என பழைய 21 காவலாளியில் ஒருவன் சொல்ல அனைத்து பழைய காவலாளிகளும் இதற்கு சம்மதிகிறார்கள்.
அன்று இரவே திட்டப்படி 21 பழைய காவலாளிகளும் வாழைத் தோட்டத்துக்குள் நுழைந்து 21 வாழைக் குலைகளை அறுத்து திருடிக் கொண்டு சென்றுவிடுகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் மன்னன் அமைச்சரை அழைத்த கொண்டு நீண்ட நாட்கள் ஆனதால் வாழைத் தோட்டத்தை சுற்றிப் பார்க்க புறப்பட்டனர்.
பாண்டிய மன்னனும் அமைச்சருமாக தோட்டத்திற்கு வந்து இருவரும் சுற்றி பார்த்தார்கள் அப்படி அவர்கள் பார்த்துக் கொண்டு வரும் பொழுது ஓரிடத்தில் தலையில்லாத முண்டம் போல குலைகள் இல்லாத வாழை மரங்களை கண்டார் மன்னர்.
குலைகள் இல்லாத வாழை மரத்தை கண்ட மன்னன் பெரும் அதிர்ச்சி அடைந்தார். பின் அமைச்சரை அழைத்து அமைச்சரே வாழை குலைகளை வெட்ட நீங்கள் ஏதாவது அனுமதி கொடுத்தீரா என கேட்டார் உடனே அமைச்சர் இல்லை மன்னா நான் எந்த உத்தரவும் கொடுக்கவில்லை இன்று தான் நானும் உங்களோடு முதன்முறையாக இந்த வாழைத் தோட்டத்துக்குள் வருகிறேன் என்றார் அமைச்சர்.
மன்னன் வாழை குலைகளை கவனித்தான் மொத்தம் 21 குலைகள் வெட்டபட்டு இருந்தது மன்னன் அமைச்சரிடம் 21 குலைகள் வெட்டபட்டுள்ளது இங்கே நாம் காவலுக்கு வைத்திருக்கும் காவலாளிகளும் 21 நிச்சயமாக இவர்கள் தான் ஆளுகொன்றாக வெட்டியிருக்க வேண்டும் சந்தேகமே இல்லை.
அவர்கள் வாழை குலைகளை வெட்டுவதற்கு முன்பு நம்மிடம் அனுமதி கேட்டிருக்க வேண்டும். இவர்களை காவலுக்கு வைக்கும் போதே சம்பளம் பேசப்பட்டது முதல் விளைச்சல் அரசாங்கத்துக்குரியது என்றும் இரண்டாவது விளைச்சல் தான் காவலாளிகளுக்குரியது என்றும் பேசி ஒப்பந்தம் செய்யபட்டது.
இப்படி ஒரு ஒப்பந்தம் இருக்கும் போது அவர்கள் எப்படி நமக்கு தெரியாமல் முதல் விளைச்சலை எடுக்கலாம் என்று கோபமாக பேசினார் பாண்டிய மன்னன்.
மேலும் பாண்டிய மன்னன் மிகுந்த ஆத்திரத்தோடு அமைச்சரே. இந்த முறை வாழை குலைகளை திருடிய காவலாளிகளை சும்மா விடக்கூடாது ஏற்கனவே இதே போல முன்பு ஒரு சம்பவம் நடந்ததற்கு அந்த 21 காவலாளி களையும் சும்மா விட்டதால் தான் தற்போது இந்த காவலர்களும் அதேபோல திருடி உள்ளார்கள்.
அமைச்சரே நமக்குத் தெரியாமல் நம்முடைய வாழைத் தோட்டத்தில் திருடி விட்டார்கள் இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து இனி யாருமே இது போல ஒரு தவறை செய்யக்கூடாது அப்படிப்பட்ட ஒரு தண்டனையை நாம் கொடுக்க வேண்டும். எனவே காட்டுக்கு ஒவ்வொரு திசையாக 21 பேரையும் வெட்டி கொன்று விடுங்கள் என்று மன்னன் உத்தரவிட்டான்.
மன்னரின் உத்தரவை அமைச்சர் செயல்படுத்தினார்.
அன்று இரவு 21 காவலர்களும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தனர். வாழை குலைகள் திருடபட்ட விஷயம் அவர்களுக்கு தெரியாது அப்போது தீடீரென மன்னனின் படையாட்கள் அங்கு வந்து அவர்களை வெட்டத் தொடங்கினார்கள்.
ஒரு பாவமும் அறியாத காவலாளிகள் ஏன் வெட்டுகிறார்கள் எதற்காக வெட்டுகிறார்கள் என்று தெரியாமல் அலறியடித்தபடி ஓடத் தொடங்கினார்கள். அவர்களை விரட்டி விரட்டி திசைக்கு ஒருவராக வெட்டி கொன்றனர்.
இப்படி கொடுரமான கொலை செய்யபட்ட 21 காவலாளிகளின் உயிர்களும் அதே தோட்டத்தில் அவர்கள் குல தெய்வமாக வைத்து வணங்கி கொண்டு இருந்த குலைவாழை இசக்கி அம்மனின் காலடியில் தஞ்சமடைந்து காலடியை பிடித்து கதறி அழுது வேண்டினார்கள்.
அம்மா குலைவாழை இசக்கி ஒரு பாவமும் நாங்கள் செய்யவில்லை எங்களை எதற்காக இப்படி ஓட ஓட விரட்டி அநியாயமாக கொன்றனர் என 21 காவலாளிகளும் கேட்க அம்மை குலைவாழை இசக்கி அவர்கள் முன் தோன்றி பிள்ளைகளே! பழைய காவலாளிகள் செய்த சூழ்ச்சியால் நீங்க கொல்லபட்டீர்கள் என நடந்ததை சொன்னார்.
அதை கேட்டு கோபம் கொண்ட 21 காவலாளிகளும் அம்மா ஒரு பாவமும் செய்யாமல் காவல்காத்த எங்களை திருடர்களாக நினைத்து எந்த விசாரணையும் செய்யாமல் செய்யாத குற்றத்திற்கு அநியாயமாக கொன்ற பண்டிய மன்னனையும் அந்த பழைய காவலர்களையும் பழிக்கு பழி வாங்க வேண்டும் நாங்கள் இருபத்தியோரு பேரும் சேர்ந்து இந்த பாண்டிய நாட்டை மண்புழுதிக் காடாக மாற்ற வேண்டும் அதற்கு அம்மா தாயே! எங்களுக்கு நீதான் வரம் தர வேண்டும் என 21 பேரும் வரம் கேட்டார்கள்.
அப்போது குலைவாழை இசக்கி அவர்களிடம் என் பிள்ளைகளே நீங்கள் எந்த பாவமும் செய்யாதவர்கள் எனக்கு தெரியும் உயிர் பலி வாங்கிவிட்டான் பாண்டிய மன்னன் அதுவும் எனக்கு தெரியும் உங்களுக்கு வரம் கொடுக்க நானோ ஈசனிடம் வரம் வாங்கி வரவில்லை.
என் பிள்ளைகளே நான் இசக்கி அம்மனிடம் வரம் வாங்கி வந்தவள் வரம் கொடுக்க என்னால் முடியாது சிவப் பெருமானால் மட்டுமே உங்களுக்கு வரம் தர முடியும்.
என் பிள்ளைகளே நீங்கள் அனைவரும் என்னோடு வாருங்கள் கைலாச மலைக்கு சிவப்பெருமானை சந்திக்க நான் உங்களை அழைத்து போகிறேன்.
அங்கே சிவப் பெருமானிடம் உங்களுக்கு வேண்டிய வரத்தை பெற்றுகொள்ளுங்கள் என்று கூற. அப்படியாக இருபத்தியோரு பேரும் குலைவாழை இசக்கியோடு ஆண்டவனை சந்தித்து வரங்களை பெற கைலாயம் வருகிறார்கள்.
கைலாயம் சென்று சிவப் பெருமானை கண்ட குலைவாழை இசக்கி. ஆண்டவன் பெற்பாதங்களை வணக்கி ஆண்டவா இதோ கைகளை கூப்பி வணங்கி நிற்கிறார்களே இவர்கள் இருபத்தியோரு பேரும் எனது பிள்ளைகள்.
இவர்கள் ஒரு பாவமும் செய்யாதவர்கள் அவர்களை எந்த விசாரணையும் செய்யாமல் அநியாயமாக பண்டிய மன்னன் காட்டுக்கொரு திசையாக வெட்டி கொன்றுவிட்டான் என்று சிவப்பெருமானிடம் கூறினாள் அம்மை குலைவாழை இசக்கி.
இதை கேட்ட சிவப் பெருமான் சரி இவர்களை இங்கே ஏன் அழைத்து வந்தாய் என கேட்க, ஆண்டவா, நீதி தவறி அநியாயமாக உயிர் பலி எடுத்த பாண்டிய மன்னனை பலி வாங்க இவர்கள் நினைக்கிறார்கள், நாங்களாக எதுவும் செய்ய முடியாது அதற்கு நீங்கள் தான் வரம் கொடுக்க வேண்டும் ஆண்டவா, தாங்கள் வரம் கொடுத்தால் தான் நினைத்தகாரியத்தை நாங்கள் முடிக்க முடியும் என வேண்டினாள் குலைவாழை இசக்கி அம்மை.
இதை கேட்ட ஆண்டவன் சிவப்பெருமான் அம்மா குலை வாழை இசக்கி உன் பிள்ளைகளுக்கு வரம் வேண்டுமென கேட்கிறாய் ஆனால் இவர்கள் சாதாரண மானிடப் பிறவியாக பிறந்து இறந்தவர்கள் அவர்களுக்கு உடனே வேண்டிய வரங்களை கொடுத்து தெய்வமாக்கி எப்படியம்மா பூலோகம் அனுப்ப முடியும் என்றார்.
ஆண்டவா ஈசனை தேடிவந்தவர்கள் வரம் பெறாமல் போக முடியுமா நானும் என் பிள்ளைகளும் நீங்கள் சொல்வதை கேட்கிறோம், கேட்கும் வரங்களை தந்து அருள வேண்டும் சுவாமி என வணங்கி நின்றாள் அம்மை.
உடனே சிவப்பெருமான் அம்மா வரம் கொடுக்க வேண்டுமென்றால் முதலாவதாக உனது பிள்ளைகளை நான் சோதிக்க வேண்டும், அந்த சோதனையில் அவர்கள் வெற்றி பெற வேண்டும், அப்படி அந்த சோதனைகளில் வெற்றி பெற்றார்கள் என்றால் அவர்களுக்கு பெயர் நாமத்தையும் சூட்டி வேண்டிய வரங்களையும் கொடுப்பேன் என்றார் சிவப்பெருமான்.
குலை வாழை இசக்கி அம்மை அந்த சோதனைகள் என்னென்ன என்று கேட்க.
சிவப் பெருமான் அம்மா உன் பிள்ளைகள் ஏழு பிறவி எடுத்து நான் வைக்கும் சோதனையை கடந்து வர வேண்டும்.
அதாவது உன் பிள்ளைகள் தெய்வமாக தகுயுடையவர்கள் தானா என்பதற்காக தான் இந்த சோதனை இதில் உனக்கு சம்மதமா என கேட்டார் ஆண்டவன். அப்படியே ஆகட்டும் என சம்மதித்தாள் அம்மை.
ஐயனே என் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு பிறவியாக சொல்லுங்கள் அந்த பிறவியை எடுத்து அந்த சோதனையை என் பிள்ளைகள் கடந்து வெற்றி பெறுவார்கள் என்றாள் குலைவாழை இசக்கி அம்மை.
அதன் படி சிவப்பெருமான் அம்மா குலை வாழை இசக்கி உன் பிள்ளைகளுக்கு முதல் பிறவியை சொல்கிறேன் கேள் என்று முதல் பிறவியை சொன்னார்.
அதாவது முதல் பிறவியில் பிறந்து கடல் அலையை எண்ணி வர வேண்டும் அப்படி எண்ணி முடித்தால் முதல் பிறவி பூர்த்தியாகும் என்றார் சிவப் பெருமான், இதற்கு 21 பேரும் சம்மதிக்கிறார்கள்.
முதல் பிறவி.🔅
சிவப் பெருமான் சொன்னபடி முதல் பிறவியை முடிக்க அம்மை பிள்ளைகளை அழைத்து பூலோக பிறவியேடுத்து பிள்ளைகள் கடற்கரையில் அமர்ந்து கடல் அலையை எண்ண தொடங்கினார்கள்.
கடல் அலைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தது இப்படியே எட்டோடு எட்டாக 16 நாட்கள் கடந்தது 21 பேரும் அந்த அலைகளை எண்ணிக் கொண்டே இருந்தனர்.
ஆனால் அவர்களால் எண்ணி முடிக்க முடியவில்லை அலைகள் வந்து கொண்டே இருந்தது உடனே குலைவாழை இசக்கியிடம் சென்று தங்களால் எண்ண முடியவில்லை என்று கூறினார்கள்.
உடனே குலை வாழை இசக்கி நேராக பார்வதி தேவியிடம் சென்று, அம்மா சிவபெருமான் அலையை எண்ணி வரச் சொன்னார் அது எங்களால் முடியவில்லை தாயே! என் பிள்ளைகளுக்கு நீதான் உதவ வேண்டும் தாயே என்றார்.
அதை கேட்டு மனம் உருகிய அம்மை பார்வதி தேவி அம்மா குலை வாழை இசக்கி அலைகளிலே இரண்டே இரண்டு அலைகள் தான் உண்டு ஒன்று ஆண் அலை, இரண்டு பெண் அலை, ஆதிபரன் என்பது ஆண் அலை, அம்மை உமை என்பது பெண் அலை, கடல் அலையில் இந்த இரண்டு அலைகள் தான் உள்ளது, இதை உன் பிள்ளைகளிடம் சொல்லி சிவபெருமானிடம் சென்று சொல்லச் சொல் என்றார்.
அதன்படியே 21 பேரும் சிவபெருமானிடம் சென்று சொல்ல சரியாக சொன்னதால் முதல் பிறவி முடிந்துவிட்டது என்றார் சிவபெருமான்.
இரண்டாவது பிறவி.🔅
சிவபெருமான் அடுத்த பிறவியை குலைவாழை இசக்கியிடம் கூறினார், அம்மா உன் பிள்ளைகளுக்கு அடுத்த பிறவியின் சோதனை என்னவென்றால் வடவால் மரத்தின் இலைகளை எண்ணி எத்தனை இலை என்று சொல்ல வேண்டும் என சிவப்பெருமான் சொல்ல அம்மை குலைவாழை இசக்கி வடவால் என்றால் என்னவென்று கேட்க ஈசன் அம்மா கைலாசத்துக்கு வடக்குப் புறம் இருக்கும் ஆலமரத்தை தான் வடவால் மரம் என்பார்கள் அந்த ஆலமரத்தில் எத்தனை இலைகள் உள்ளன என்பதை எண்ணி வரவேண்டும் என்றார்.
அதன்படி 21 பேரும் மறுபிறவி எடுத்து ஆலமரத்தில் உள்ள இலைகளை எட்டோடு எட்டாக ஆக மொத்தம் 16 நாட்கள் எண்ணினார்கள், ஆனால் அவர்களால் எண்ண முடியவில்லை.
ஏனென்றால் மரத்தில் ஒரு பக்கம் இலைகள் உதிர்ந்து கொண்டே இருந்தது மறுபக்கம் இலைகள் துளிர்த்துக் கொண்டே இருந்தது அதனால் அவர்களால் மரத்தில் உள்ள இலைகளை எண்ண முடியவில்லை.
இதனை குலைவாழை இசைக்கியிடம் சென்று கூறினார்கள் உடனே குழைவாழை இசைக்கி பார்வதி தேவியிடம் மீண்டும் ஓடி சென்று அம்மா ஆதிபராசக்தி என் பிள்ளைகளால் சிவப்பெருமான் வைத்த சோதனையில் வெற்றி பெற முடியவில்லையம்மா என நடந்தவற்றை கூறி நீதான் வழிகாட்ட வேண்டும் என அம்மை பராசக்தியின் பொற் பாதத்தில் சரணமடைந்தாள்.
அதற்கு பார்வதிதேவியார் அம்மா குலைவாழை இசக்கி அந்த மரத்தில் இருப்பது இரண்டே இரண்டு இலைகள் தான் ஒன்று பழுத்த முதிர்ச்சி அடைந்த இலை, இரண்டாவது துளிர்க்கின்ற இலை இதை உன் பிள்ளைகளுக்கு சொல் என பார்வதி தேவியார் சொன்னார்.
உடனே குலைவாழை இசக்கியம்மன் இதை 21 பேரிடமும் சென்று கூறினார் அதை கேட்ட 21 காவலாளிகளும் அந்த விடையை உடனே சிவபெருமானிடம் சென்று சொன்னார்கள் மிக சரியான விடை என இரண்டாவது பிறவியை முடித்து வைத்தார் சிவப்பெருமான்.
மூன்றாம் பிறவி.🔅
இரண்டு பிறவியை முடித்த பிறகு அடுத்து மூன்றாவது பிறப்பைப் பற்றி கூறினார் சிவப்பெருமான்.
அம்மா குலைவாழை இசக்கி உன் பிள்ளைகள் 21 பேரும் மூன்றாவது பிறவியாக அக்னி தூணை தழுவி பிறந்து வர வேண்டும், என சொல்ல அதை கேட்ட 21 பேரும் அடுத்த பிறவியேடுத்து அக்னி தூணை பிடித்து தழுவும் போது அதிலிருந்து வரும் வெப்பம் உடலை சுட 21 பேரும் அம்மா! அம்ம! என தூணின் வெப்பம் தாங்காமல் அலறினார்கள்.
இதை பார்த்த குலை வாழை இசக்கி அம்மை வேறுவழியில்லை அன்னை ஆதிபராசக்தி ஆகிலாண்டேஸ்வரி பார்வதி தேவியால் தான் உதவ முடியும் என அன்னையிடம் உதவி கேட்க,
உடனே அன்னை பார்வதிதேவி குலைவாழை இசக்கி அம்மைக்கு ஒரு பிரம்பை கொடுக்கிறார், அதை கொண்டு வந்து அக்னி தூணின் மீது ஓம் ஆதிபராசக்தியே போற்றி என குலைவாழை இசக்கி அடிக்க அக்னி தூண் தீ எரிந்து கொண்டு இருக்கும் போதே குளிர்ந்து போனது,
அதை பிடித்து 21 காவலாளிகளும் தழுவிக் கொண்டு துள்ளி குதித்து விளையாடி கொண்டு வருகிறார்கள் அந்த பிறவியும் வெற்றிகரமாக முடிந்தது.
நான்காவது பிறவி.🔅
முன்றாவது பிறவியை முடித்து சிவப்பெருமானிடம் வந்து நிற்கிறார்கள் 21பேரும் உடனே சிவபெருமான் அம்மா! குலைவாழை இசக்கி உன் பிள்ளைகள் மூன்று பிறவியெடுத்து மூன்று சோதனைகளையும் முடித்துவிட்டார்கள், இப்போது நான்காவது பிறவி சொல்கிறேன் கேளுங்கள்.
நான்காவது பிறவியாக 21 பேரும் கழுமுனையில் ஏறி வர வேண்டும், என்று சொல்கிறார் இதற்கு 21 பேரும் சம்மதிக்கவே.
சிவப்பெருமான் தேவ கணங்களே 21 பேரையும் கழுவில் ஏற்ற சரியான கழு உடனடியாக தயார் செய்யுங்கள் என சொல்ல 21 கழுமுனை தயார் செய்யப்படுகிறது.
21 பேரையும் கழுமுனையில் போடுகிறார்கள், வலி தாங்க முடியாமல் 21 பேரும் அம்மா அம்மா வலி தாங்க முடியவில்லையம்மா என கதறி அழுதனர் அதை பார்த்த குலைவாழை இசக்கி அம்மைக்கு தாங்க முடியவில்லை, உடனே ஓடோடினார் பார்வதி தேவியிடம்.
அம்மா என் பிள்ளைகளை கழுவில் போட்டு வலியில் துடிக்கிறார்கள் அம்மா நீதான் காப்பற்ற வேண்டும் அம்மா என கேட்க பார்வதி தேவி அம்மா குலைவழை இசக்கி கவலைப்படாதே இதை பெற்றுக்கொள் எனது கொண்டை ஊசி இதை அந்த கழுமுனைக்கு அருகில் நாட்டி வை உன் பிள்ளைகளுக்கு எதுவும் ஆகாது என ஆசீர்வதித்து அனுப்பினார்.
தேவின் கொண்டை ஊசியை பெற்றுக் கொண்ட குலைவாழை இசக்கி 21 கழுமுனைக்கு நடுவில் அதை நட்டு வைக்க அனைத்து கழுமுனைகளும் பலம் இழந்து வலி இல்லாமல் கழுமுனையில் இருந்து 21 பிள்ளைகளும் கீழே இறங்கினார்கள் அவர்களை அழைத்துக் கொண்டு சிவப்பெருமானிடம் வந்தாள் குலைவாழை இசக்கி அம்மை.
ஐந்தாவது பிறவி.🔅
சிவப்பெருமான் அவர்களை பார்த்து அம்மா குலைவாழை இசக்கி நன்கு பிறவிகளை உன் பிள்ளைகள் முடித்து விட்டார்கள் அடுத்ததாக ஐந்தாவது பிறவி கல்லறைக்குள் பிறந்து வரவேண்டும் என்றார்.
அதாவது ஒரு பெரிய குழி தோண்டி அந்த குழிக்குள் அடைத்து பெரிய பாறாங்கல்களை கொண்டு மூடி அதற்கு மேற் கற்களை கொண்டு கல்லறை கட்டிவிடுவார்கள் அதிலிருந்து வெளியே வர வேண்டும்.
இதையும் 21 பேரும் சம்மதிக்கிறார்கள் உடனே ஈசன் தேவ ஆட்களை அழைத்து மாந்தையர்களை கொண்டு பெரிய குழி எடுத்து கல்லறை கட்டி 21 பேரையும் அடைக்க உத்தரவிட்டார் அதைப் போல 21 பேரும் கல்லறைக்குள் அடைக்கபட்டனர் வெளியில் பிள்ளைகளுக்காக குலைவாழை இசக்கி காத்துக்கொண்டு இருந்தார்.
எட்டோடு எட்டு பதினாறு நாட்கள் ஆகியும் பிள்ளைகள் வெளியில் வரவில்லை. அந்த கல்லறையை சுற்றி வந்து என் பிள்ளைகளே வெளியில் வாருங்கள் என அழைத்தும் பயனில்லை அன்னை பார்வதியிடம் தஞ்சமில்லாமல் பிள்ளைகளை காக்க முடியாது என அன்னை பார்வதி தேவியிடம் பிள்ளைகளை காப்பாற்று என தஞ்சமடைந்தாள் அம்மை குலைவாழை இசக்கி.
இதை கண்ட பார்வதி தேவி அம்மா குலைவாழை இசக்கி நான் இருக்க கவலை வேண்டாம் இதோ இந்த பெற் பிரம்பை வாங்கி கொள் என்னை நினைத்து கொண்டு கல்லறையை ஒரு தட்டு தட்டினால் கல்லறை பிளக்கும் உன் பிள்ளைகள் வெளியில் வருவார்கள் என ஆசீ கூறி அனுபினார் பார்வதிதேவி.
பார்வதி தேவியிடம் பெற் பிரம்பை பெற்றுக்கொண்டு குலைவாழை இசக்கி 21 பிள்ளைகள் அடைபட்டு இருந்த கல்லறைக்கு வருகிறார் கல்லறையில் ஆதிபராசக்தி என ஒரு தட்டு தட்டவே பாறைகள் பிளந்தது உள்ளே இருந்து பிள்ளைகள் ஆதாளி போட்டுக் கொண்டு குதித்து வருகிறார்கள் அம்மை சந்தோஷத்தோடு அவர்களை சிவப்பெருமானிடம் அழைத்து செல்கிறாள்.
ஆறாவது பிறவி. 🔅
இப்போது சிவப்பெருமான் அம்மா குலைவாழை இசக்கி உன் பிள்ளைகள் கல்லறையில் பிறந்து வந்துவிட்டார்கள் ஐந்தாவது சோதனை முடிந்தது. அடுத்ததாக ஆறாவது பிறவி கொதிக்கும் மஞ்சக்கிடாரத்தில் ஒரு பிறவி எடுத்து வர வேண்டும் என்றார்.
21 பேரும் ஆறாவது பிறவிக்கு சம்மதித்ததும் சிவப் பெருமான் தேவ ஆட்களை அழைத்து பெரிய அடுப்பு போட வைத்து யானையின் தோலில் துரத்தி செய்து அனல் ஊதி அடுப்பு எரித்து 21 பேர் மூழ்கிவிடும் அளவுக்கு பெரிய மஞ்சள்கிடாரத்தை வைத்து ஒரு கோடி மந்திரங்களை சிவன் சொல்ல தண்ணீர் கொதிக்கிறது அந்த மஞ்சள்கிடாரத்தில் 21 பேர்களும் இறங்கி வர வேண்டும்.
சிவப்பெருமானிடமிருந்து வரம் கிடைக்குமே என்ற காரணத்திற்காக 21 பேர்களும் உள்ளே இறங்கினார்கள் வலி தாங்க முடியாமல் அம்மா..அம்மா..காப்பாற்று அம்மா என அலறினார்கள்.
பிள்ளைகள் மஞ்சள்கிடாரத்திற்குள் படும் கஷ்டத்தை பார்த்து பெறுக்க முடியவில்லை குலை வாழை இசக்கி அம்மைக்கு உடனே அன்னை பார்வதியிடம் உதவி கேட்டாள் அம்மை.
உடனே அன்னை ஆதிபராசக்தி கை நிறைய மஞ்சள் பொடியை கொடுத்து இதை கொண்டு சென்று என்னை நினைத்துக் கொண்டு மஞ்சள்கிடாரத்தில் வீசு எல்லாம் சரியாகிவிடும் என்றாள்.
அதை போலவே குலைவாழை இசக்கியும் செய்தாள் மஞ்சள்கிடாரம் கொதித்தது ஆனால் சுடவில்லை இதானல் 21 பேரும் கொதிக்கும் மஞ்சள்கிடாரத்தில் குதித்து விளையாடி வருகிறார்கள் பொங்கி வரும் மஞ்சள்கிடாரத்தில் மூழ்கி வருகின்றனர்.
மஞ்சள்கிடாரத்திலிருந்து வெளியில் வந்ததும் அவர்களை அழைத்து கொண்டு சிவப்பெருமானிடம் வருகிறார் அம்மை குலைவாழை இசக்கி.
ஏழாவது பிறவி.🔅
சிவப்பெருமான் ஏழாவது பிறவியை சொன்னார் ஏழாவது பிறவியாக, 21 பேரும் என்னுடைய திருச்சடையில் (தலை முடியில்) பிறந்து வரவேண்டும் என்றார்.
அனைத்து பிறவியிலுமே 21 பேரும் தீராத துன்பங்கள், பொறுக்க முடியாத வலிகள் எல்லாம் பெற்று குலை வாழைக் இசக்கியின் அருளாலாலும் அன்னை பார்வதி தேவியாரின் உதவியாலும் ஆறு பிறவியை முடித்தார்கள்.
இதை எல்லாம் கண்டும் காணாதது போல் இருந்த சிவபெருமான் கடைசியாக இவர்களை தப்ப முடியாமல் சிறைபடுத்த எண்ணினார்.
சிவனும் பார்வதி தேவியும் கலந்த திருவுருவம் கொண்டு தனது திருசடையை வளர வைத்தார். பன்னிரெண்டு ஆண்டுகாலமாக வளர வேண்டிய திருசடை 12 நாட்களில் வளர்ந்தது பின் திருசடை முடிக்குள் 21 பேரையும் சிறை வைத்து அடைத்தார்.
திருசடைகுள் அகப்பட்டுக்கொண்ட 21 பேரும் கதறினார்கள் ஆனால் இந்த முறை அம்மை குலை வாழை இசக்கியாலும் பார்வதி தேவியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை ஏனென்றால் பார்வதிதேவியின் திருச்சடையும் சிவப் பெருமான் திருசடையோடு பின்னி பிணைந்து இருந்தது.
எனவே பார்வதி தேவியால் அவர்களுக்கு உதவ முடியாமல் போனது, ஆனாலும் 21 பேரும் சிவபெருமானின் புகழை பாடினால் பிழைக்க வழியுண்டு என சிவப் பெருமானின் புகழை பாடினார்கள் உடனே சிவபெருமான் மனம் இறங்கி அவர்களை விடுவித்தார் இதன்மூலம் அவர்கள் ஏழு பிறவியையும் வெற்றிகரமாக முடித்தார்கள்.
அதன்படி சிவபெருமான் 21 பேருக்கும் பெயர்களை சூட்டுகிறார் அதில் முதலாவதாக இருந்தவருக்கு மன்னர் ராஜா வாதை, மன்னன் கருங்காளி வாதை, மந்திர மூர்த்தி வாதை, மணி கிலிக்கி வாதை, மகுடம்தட்டி வாதை, கடுவா மூர்த்தி வாதை, போக்குவரத்து வாதை, புதுபுனத்து வாதை, கலகம்தட்டி வாதை, கைமுறிவாள் வாதை, ஈனகுல வாதை, ஈளந்தரத்து வாதை, சப்பாணி வாதை, கழுக்கார வாதை, அறுதகுல வாதை, என 21 வாதைகளுக்கும் பெயர் சூட்டினார்.
அடுத்து சிவப் பெருமான் குலை வாழை இசக்கி அம்மைக்கும் குலைவாழை கன்னி என்றும் பாலாட்டுகாரி, சூலாட்டுகாரி, ஒத்தசடை இசக்கி என்றும் பெயர் சூட்டினார்.
இவ்வாறாக 21வாதைகளுக்கும் அம்மை குலைவாழை இசக்கிக்கும் பெயர் சூட்டிய பிறகு அனைவருக்கும் வரம் தரப் போகிறேன் என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார் சிவப்பெருமான்.
21 வாதைகளும் ஒன்று சேர்ந்து கேட்கிறார்கள் ஐயனே! ஒரு மன்னவன் என்பவன் நீதி நெறி தவறாதவனாகவும் விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை வழங்குபவனாகவும் இருக்க வேண்டும் அப்படி இல்லாமல் நீதி தவறிய மன்னன் மன்னன் அல்ல அவன் அழிய வேண்டும்.
எந்த பாவமும் செய்யாத எங்களை கொன்றானே அந்த பாண்டிய மன்னனையும் அவனது நாட்டையும் மண்னோடு மண்ணாக்க வேணாடும். என சொல்லி 21வாதைகளும் குலைவாழை இசக்கியும் சேர்ந்து வரம் கேட்கிறார்கள்.
சிவப்பெருமானிடம் கேட்ட வரங்களில் சில.
பண்டியனையும் அவன் மதுரை நாட்டையும் மண் புழுதியாக்க வரம்,
மாடர் குல நம்பிமார்களையும் அவர்கள் வம்சத்தையும் அழிக்க வரம்,
மாரி பூசை வாங்க வரம், ஏழு மலை காணியிலும் இருந்து பூசை வாங்க வரம்,
மயிலேறி கணியானிடம் வாய்த்த பூசை வாங்க வரம்,
ஏரி குளம் எங்கும் ஏற்ற உளியேறிய வரம்,
வாதைகள் அருகில் வரவே அச்சம் கொள்ள வரம்,
காலிபோர் வண்ணானிடம் கணத்த பூசை வாங்க வரம்,
கொல்ல வரம்,
வெல்ல வரம்,
கொடுக்கும் வரம்,
அழிக்கும் வரம்,
நோய் தீர்க்கும் வரம்,
தீராத வினைகள் எல்லாம் தீர்க்கும் வரம்,
மாறாதநோயெல்லாம் மாயத்தால் மாற்ற வரம்,
தீராத நோயெல்லாம் திருநீற்றால் தீர்க்க வரம்,
ஆக்க வரம்,
ஆனை பந்தம் கொழுத்த வரம்,
அலுக்கு தடி எடுக்க வரம்,
குதிரைபந்தம் கொத்தவரம்,
குலுக்கிவிளையாட வரம்,
ஆனைபோல் அலற வரம்,
அங்குஇங்கும் ஓட வரம்,
பூனைப் போல பதுங்க வரம்,
புலி பாய்சல் பாய வரம்,
சூனியம் மாற்ற வரம்,
நினைத்தவுருவம் எடுக்க வரம்,
இப்படியாக ஆறுவது வகையான வரங்களை கேட்டு இத்தனை வரங்களும் உடனே வேண்டும் ஆண்டவனை என கேட்க அனைத்தையும் கொடுத்தார் சிவப் பெருமான் அதன் பின்னர்.
நாலுமாத சூலிகளை நகத்தால் கிள்ள வரம்,
ஐந்து மாத சூலிகளை கண்டால் அம்மாணை போட வரம்,
எட்டு மாத சூலிகளை கண்டால் இல்லாமல் ஆக்க வரம்,
பத்து மாத சூலிகளை கண்டால் பால்வடிய கொல்ல வரம்,
இத்தனை வரங்களும் எங்களுக்கு உடனே வேண்டும் என்றனர் 21 வாதைகளும் இதை கேட்ட சிவப் பெருமான் அடே! வாதைகளை இந்த வரங்களையெல்லாம் பெற்றுக்கொண்டு பூலோகத்தில் சென்று அங்கிருக்கும் மக்களுக்கு இன்னல்களை கொடுத்தால் அந்த மக்கள் உங்களை தெய்வமாக கரம் எடுத்து வணங்குவார்களா என்ன வரம் இது என்றார்.
சிவப்பெருமானே நாங்கள் வாதைகள் தான் குலைவாழை இசக்கியின் பிள்ளைகள் தான் எங்களை நம்பி வணங்கியவர்களுக்கு ஒரு நாளும் இடைஞ்சல் செய்ய மாட்டேம் எங்களை நம்பியவருக்கு நடராஜனை போல் இருந்து காப்போம்.
எங்களை நம்பி வணங்கும் மக்களின் குறைகளை தீர்போம் அவர்களை ராஜாவாக வாழ வைப்போம். மேலும் எங்களை நம்பாதவர்களை அழிப்போம்.
இது ஒரு தெய்வமா என்றும் எங்களை சாதாரணமான வாதைகள் என்றும் ஏளனமாக நினைப்பவர்களின் குடலை உறுவி கழுத்தில் மாலையாக போட்டு படையல் போடுவோம்.
எங்களை தெய்வமாக வணங்கும் பிள்ளைகளுக்கு கஷ்டங்களையும் துன்பத்தையும் தொந்தரவுகளையும் நீக்குவோம் எங்கள் பிள்ளைகளுக்கு தொல்லை கொடுப்பவர்களின் வம்சத்தையே அழிப்போம்.
எங்களை தெய்வமாக கூப்பிடும் பிள்ளைகளுக்கு என்றும் காவலாக இருப்போம் என்று சொல்லி வரம் கேட்க சிவப்பெருமான் அனைத்து வரங்களையும் தந்தேன் என கேட்ட வரத்தையும் கொடுத்து தெய்வங்களான 21 வாதைகளுக்கும் அம்மைக்கும் ஆயுதங்கள் கொடுக்கிறார் சிவபெருமான்.
ஆயுதங்களாக வெட்டறிவாள், ஈட்டி, பந்தம், சல்லடம், தொப்பி, பெந்து தடி, இது எல்லாம் வாதைகளுக்கு கொடுத்த பிறகு குலைவாழை இசக்கி அம்மைக்கு வெள்ளி மணிபதக்கத்தை கையில் கொடுத்து ஒரு வெள்ளி பிரம்பையும் கையில் கொடுத்து அம்மா குலைவாழை இசக்கி இந்த பிரம்பை கையில் எடுத்து எதை எதை நீ நினைக்கிறாயோ அது கண்டிப்பாக நடக்கும் என்று சொல்லி ஆசி வழங்கி அனைவரையும் சிவப்பெருமான் பூலோகம் அனுப்பி வைக்கிறார்.
வரங்களை பெற்ற பின் பூலோகம் வந்த 21 வாதைகளும் பாண்டிய மன்னனையும் நம்பிமார்களையும் அழித்தனர் பின்னர் பாண்டிய நாட்டையே அழித்து மண்புழுதிக் காடாக மாற்றினார்கள்.
பின்பு சாந்தமடைந்த தெய்வமாகி பூசை வைத்துக் கேட்கவே அங்காங்கு இருந்த மக்கள் 21 வாதைகளையும் அம்மையையும் தெய்வமாக வணங்கினார்கள்.
மன்னன் ராஜா வாதை, மன்னன் கருங்காளி, வாதை இப்படி 21 வாதைகளும் குலைவாழை இசக்கி அம்மையும் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருந்து இன்றும் பிள்ளைகளுக்கு ஆசிவழங்கி அருள்பாலித்து வருகின்றனர்.
மேலே சொல்லபட்ட வரலாற்றுக் கதை நமது முன்னோர்களின்
பழம்தமிழர் கலையான வில்லிசை வில்லுப்பாட்டிலிருந்து பெறப்பட்டது நன்றி.
கிராமத்து குல தெய்வம் அருள்மிகு குலைவாழை இசக்கி அம்மையின் வரலாற்று கதை.
| குலைவாழை இசக்கி அம்மன் |
அருள்மிகு குலைவாழை இசக்கி அம்மன் முழுக்கதை.
கிராமப்புறங்களில் குலைவாழை இசக்கி அம்மன் கதை வில்லுபாட்டில் பாடபடுகிறது. இந்த கதைகள் நம் முன்னோர்களின் வழிபாடுகளையும் நம்பிக்கையையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அந்த கதை இரண்டு மணிநேரமாக வில்லுபாட்டில் பாடப்படும். தற்போதுள்ள தலைமுறைக்கு இந்த கதைகளை எடுத்து சொல்லவே இந்த பதிவு.
அடவி மலைபகுதியிலே நம்பிமார்கள் என்ற வம்சாவளியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் கொற்ற நம்பி,வலிய நம்பி என பல நம்பிமார்கள் அந்த மலைபகுதில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அங்கு வருட கணக்கில் மழையில்லாமல் பஞ்சம் நிலவியது பிழைக்க வழியில்லாமல் மிகவும் கஷ்டபட்டனர்.
இவ்வாறு இருக்க நம்பிமார்களில் ஒருவன் அண்ணே இனி இப்படி இருக்ககூடாது நாம மலையடிவாரத்தில் சென்று விவசாயம் செய்யலாம் என கூற அனைவரும் ஒத்துக்கொண்டு கீழே இறங்கி மலையடிவாரத்தில் இருந்த சிறு ஓடைகளின் அருகிலுள்ள காடுகளை வெட்டி ஒதுக்கி தீ வைத்தனர் அதில் எரியாத கட்டைகளை கொண்டு வந்து காட்டு மிருகங்கள் உள்ளே வராத மாதிரி வேலி அமைத்தனர்.
இப்படி காடுகளை திருத்தி நிலத்தை பண்படுத்தி விவாசாய நிலமாக மாற்றி அதில் பல்வேறு பயிர்களை பயிரிட ஆரம்பித்தார்கள் அதில் நெல், கம்பு, கேழ்வரகு, கிழங்கு வகைகள், திணை வகைகள், இஞ்சி, ஏலம், பலா மரங்கள் மற்றும் பேயன் வாழை, சிங்கன் வாழை, ரஸ்தாளி வாழை, பச்சை வாழை, நாட்டு வாழை, மலை வாழை, நவரை வாழை, செவ்வாழை, கற்பூர வாழை, மொந்தன் வாழை, நேந்திர வாழை, கரு வாழை, அடுக்கு வாழை, வெள்ளை வாழை, என்று அனைத்து வகையான வாழை மரங்களையும் பயிரிட்டனர்.
பயிர்கள் வளர தொடங்கியது அப்போது நம்பிமார்கள் இப்படியே நாம் மலைக்கும் அடிவாரத்திற்கும் வந்து போய் இருந்தால் விவசாயம் சரியாக நடக்காது. நாம் சென்று வரும் நேரத்தில் காட்டு மிருகங்கள் பயிர்களை பாழ்படுத்திவிடுகிறது. திருடர்கள் விளைச்சல்களை திருடிவிட்டு போய்விடுவார்கள் ஆகவே இதை தடுக்க நல்ல காவல்காரனை வைக்க வேண்டும் என்கிறான் நம்பிமார்களில் ஒருவன். அடுத்தவன் வெறும் காவல்காரன் போதாது காட்டு மிருகங்களை விரட்ட தெரிந்தவனாகவும் மந்திரம் தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும் என்றான்.
இப்படி அவர்கள் ஆலோசனை போட்டுக்கொண்டே இருக்க அதில் ஒருவன் சொல்கிறான் அண்ணே மந்திரம் தெரிந்த காவல்காரன் என்றால் காக்காச்சி மலையில் காளி புலையன் என்பவர் இருக்கிறார். அவர் மந்திரம் கற்ற பெரிய மந்திரவாதி அவரின் கைவசமாக ஒரு சீடன் மந்திரவாதி இருக்கிறான். அவரை எனக்கு கொஞ்சம் பழக்கம் உண்டு அவர் பெயர் இருளிகாத்த புலையன். அவரை காவல்காக்க அழைக்கலாம். ஆனால் அவர் அவருடைய மனைவியோடு தான் வருவார் அவர்களுக்கு தோட்டத்திற்குள் தங்கவதற்கு ஒரு சிறிய மாடம் (வீடு) அமைத்து கொடுத்தால் காவலும்காத்துக் கொள்வார்கள் தோட்ட வேலைகளையும் பார்த்துக் கொள்வார்கள். இதற்கு சம்மதமென்றால் நாங்கள் இருவர் சென்று காவல்காக்க அவரிடம் பேசி பார்க்கிறோம் என்றான்.
அதன்படி இருவர் காக்காச்சி மலைக்கு இருளிகாத்த புலையனை தேடி போகிறார்கள் அங்கே அவரை சந்தித்து அவரிடம் நாங்கள் பிழைக்க வழியில்லாமல் மலையடிவாரத்தில் தோட்டம் போட்டுள்ளோம் ஆனால் காட்டு விலங்குகளிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும் அதற்கு நீங்கள் தான் காவல்காத்து தர வேண்டுமென்று கேட்டான்.
அனைத்தையும் கேட்ட இருளிகாத்த புலையன் அய்யா நான் வருவதில் தயக்கமில்லை எனது மனைவியோடு தான் நான் வருவேன் என்றார். இதை கேட்ட நம்பிமார் அப்படியென்றால் தோட்டத்திற்க்குள்ளே ஒரு மாடம்(சிறிய வீடு) அமைத்து தருகிறோம் அங்கேயே தங்கியிருந்து காவல் காத்து தரவேண்டும் என்று சம்மதம் தெரிவிக்கவே, புலையன் தன் மனைவி புலச்சியிடம் சம்மதத்தை கேட்டு அவனும் வர ஒப்புகொண்டான்.
பின்னர் இருளிகாத்த புலையன் அய்யா காவல்காத்தால் சம்பளம் என்னவென்று நம்பிமார்களிடம் கேட்டான். அதற்கு நம்பிமார்கள் அய்யா புலையனே எங்கள் தோட்டத்தை காவல்காத்தால் கன்னி அறுவடை எங்களுடையது அதாவது முதல் அறுவடையில் கிடைக்கும் குலைகள், திணைகள், பயிர்கள் அனைத்தும் எங்களுக்கு வேண்டும். காரணம் நாங்கள் பெரும் பஞ்சத்தால் பயிரிட்டுள்ளோம் எனவே எங்கள் பஞ்சத்தை தீர்க்க முதல் அறுவடையை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். அடுத்தமுறை பயிரிடும் பயிர்கள் அனைத்திலும் நேர்பாதி அறுவடையை உங்களுக்கு சம்பளமாக தருகிறோம். உங்களுக்கு தங்குவதற்கு சிறிய மாடமும்( சிறிய வீடு) உணவும் தற்போது ஏற்பாடு செய்கிறோம் எந்த குறையும் இருக்காது காவல்காக்க வாருங்கள் என்று சொல்கிறார்கள்.
இதனால் காளிகாத்த புலச்சியும் இருளிகாத்த புலையனும் நம்பிமார்கள் தோட்டத்திற்கு காவலுக்கு வருகிறார்கள். இவர்களை காவலுக்கு அமர்த்திவிட்டு நம்பிமார்கள் நிம்மதியாக வீடு திரும்பினார்கள்.
புலையனும் புலச்சியும் தோட்டத்திற்குள் சின்ன மாடம் கட்டி வாழைகளை பராமரித்து நீர் பாய்ச்சி உரம் வைத்து காவல்காத்து வந்தனர். அந்த சமயத்தில் இருளிகாத்த புலையனின் மனைவி புலச்சி கர்பமடைகிறார். நாட்கள் கடந்து போகிறது பத்து மாதம் நெருங்க நெருங்க பயிர்களும் வாழை குலைகளும் விளைச்சலை நெருங்குகிறது.
மாதங்கள் பல கடந்து வாழை மரங்கள் நன்றாக வளர்ந்து பெரிய பெரிய வாழை குலைகள் விளைந்து தொங்கி கொண்டு ஒவ்வொரு பழமாக பழுக்க தொடங்கியது நிறைமாத கர்ப்பிணி புலச்சிக்கு வாழை பழத்தின் மணம் தின்பதற்கு ஆசையை தூண்டியது.
கணவனை அழைத்து ஆசையை சொன்னாள் இதை கேட்ட புலையன் முதல் கன்னி குலைகள் நம்பிமார்களுக்கு என்று வாக்கு கொடுத்தாச்சி இருந்தாலும் நிறைமாத கர்ப்பிணி தானே கேட்கிறாள் நம்பிமார்களை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று சரி புலச்சி கொண்டு வருகிறேன் என்று சுற்றிபார்க்கும் போது கற்பூர வல்லி வாழை பழம் நன்றாக பழுத்து மணம் வீசிக்கொண்டு இருந்தது. அதை வெட்டி மனைவிக்கு ஆசை தீர சாப்பிட கொடுத்தான் புலையன்.
மறு நாள் திரும்பவும் வாழைபழம் தின்ன ஆசையாக இருக்கு என கேட்க மனைவியின் ஆசையை நிறைவேற்ற புலையன் நாளுக்கு ஒன்று ஒன்றாக வாழை குலைகளை வெட்டி பாதிக்கும் மேல் வாழை தோட்டத்தை இருவரும் சேர்ந்து தின்று தீர்த்தனர்.
இதற்கிடையே நீண்ட நாட்களாகியும் காவல்காரன் பயிர்களை பற்றிய எந்த தகவலையும் கொண்டு வரவில்லை என்று நம்பிமார்கள் கவலையாக இருந்தனர். அவர்கள் வாழை குலைகள் விளைந்து விட்டதா? அறுவடை செய்யலாமா? என்ற தகவலுக்காக காத்திருந்த நிலையில் புலையனிடமிருந்து எந்த தகவலுமில்லை. இதனால் நாமே நேரில் சென்று பார்ப்போம் என்று நம்பிமார்கள் புறப்பட்டனர்.
அடுத்தநாள் மலையடிவாரத்திற்கு வந்து வயல் பயிர்களை சுற்றி பார்த்தனர் நம்பிமார்கள். வாழை தோட்டத்தை சுற்றி பார்த்த நம்பிமார்களின் தலையில் இடிவிழுந்தது, போலிருந்தது அடி வயிறு நெருப்பாக எரிந்தது. அப்போது ஒருவன் அண்ணே யாராவது குலைகளை வெட்ட சொன்னீர்களா என்று கேட்க மற்றவர்கள் இல்லை குலைகள் வெட்டபட்ட விஷயம் இங்கே வந்த பிறகுதான் எங்களுக்கே தெரியும் அந்த இருளிகாத்த புலையன் இதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை என்றனர்.
அண்ணே இவன் இருக்க இங்கே வாழை குலைகள் திருட்டு போய்விட்டதா. அப்படி நடக்க வாய்ப்பு இல்லை அவன் ஒரு மந்திரவாதி அவனை மீறி எந்த திருடனும் வந்து திருட மாட்டான். டேய் நம்பிமார்களே அவனை இங்கே கொண்டு வாருங்கள் என்று கூட்டத்தில் ஒருவன் சொல்ல இரு நம்பிமார்கள் புலையனையும் புலைச்சியையும் அங்கே கொண்டு வந்தனர்.
அடே இருளிகாத்த புலையா உன்னை காவலுக்கு வைத்திருக்க எங்கே போனது வாழைகுலைகள் என்று கடும் கோபமாக கேட்டனர் நம்பிமார்கள். அய்யா மன்னிக்க வேண்டும் வாழை பழங்களை என் மனைவி ஆசையாக கேட்டதால் வெட்டி கொடுத்தேன் அவள் நிறைமாத கர்ப்பிணி என்றான் புலையன்.
அடே உன்னிடம் ஆரம்பத்திலேயே சொன்னேன் கன்னி குலைகள் எங்களுக்கு அடுத்த பயிரில் நேர் பாதி உனக்கு என்று முன்கூட்டியே வாக்கு கொடுத்து இருந்தோம் இல்லையா அதை மீறலாமா அதுவும் ஏதோ கர்ப்பிணி என்பதால் ஒரு குலை என்றால் பரவாயில்லை ஆனால் ஒரு தோட்டத்தையே காலி செய்துவிட்டாயே என்றான் நம்பிமார்களில் ஒருவன் கோபமாக.
அதற்கு புலையன் அய்யா எங்களுக்கு அடுத்த முறை தர வேண்டிய பங்கை கூட தர வேண்டாம் நாங்களே காவல்காத்து தருகிறோம் இந்த முறை மன்னிக்க வேணும் என்றான்.
அடே நம்பிமார்களே இவன் மீது நாம் வைத்த நம்பிக்கைக்கு நமக்கு இவன் துரோகம் செய்துவிட்டான் இவன் செய்த குற்றத்தை எவனும் செய்யகூடாது. இந்த புலையனையும் அவன் மனைவியையும் அவன் கட்டியிருக்கும் ஏறு மாடத்தை பிடுங்கி அடிங்கடா என்றான் ஒருவன். இன்னொருவன் இருவரை அடித்து கொன்று இந்த மாடத்தில் தீக்கு இரையாக்குங்கள் என்றான். உடனே ஏறுமாடத்தை பிடுங்கி நம்பிமார்கள் இருளிகாத்த புலையனையும் புலச்சியையும் மரண அடி அடிக்கிறார்கள் அடி தாங்க முடியாமல் கணவனும் மனைவியும் ஓட ஆரம்பிக்கிறார்கள். அவர்களை பின் தொடர்ந்து நம்பிமார்கள் கொலை வெறியுடன் துரத்தி வருகிறார்கள் ஓடும் போது தீடீரென இருளிகாத்த புலையன் வெட்டி விடப்பட்டிருந்த மர கட்டையில் கால் தடுக்கி பக்கதிலிருந்த இன்னொரு கட்டையின் மீது விழுந்து அந்த கட்டை மார்பில் குத்தி மார்பு பிளந்து அந்த இடத்திலேயே இறந்து போகிறான். இதை கண்டும் கதறி அழ முடியாமல் புலச்சி உயிரை காக்க தப்பித்து ஓடுகிறாள் பின் தொடர்ந்த நம்பிமார்கள் கொலை வெறியுடன் துரத்தினர்.
| அருள்மிகு இசக்கி அம்மன் |
அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய புலச்சி நீலகிரி மலையில் ஏறி உயிரை கையில் பிடித்து கொண்டு நிற்காமல் ஓடுகிறாள் கொஞ்ச நேரத்திற்கு பிறகு அவள் கண்ணுக்கு ஒரு ஆலயம் தெரிகிறது, அருகில் வந்து பார்க்கும் போது அது இசக்கி அம்மன் ஆலயம் அதற்குள் சென்று ஒழிந்து கொண்டால் தப்பித்துவிடலாம் என்று ஆலயத்திற்குள் ஒழிந்து கொண்டாள்.
அவளை பின் தொடர்ந்து வந்த நம்பிமார்கள் அண்ணே புலையன் தொலைந்தான் அவன் இறந்துவிட்டான் அவன் மனைவியையும் உயிருடன்விடக் கூடாது கால் தடத்தை பார் என்று புலச்சியின் கால் தடத்தை கவனித்தபடி பின்னாலேயே ஓடினார்கள் கடைசியாக கால் தடம் இசக்கி அம்மன் ஆலயத்தில் வந்து முடிந்தது.
உள்ளே இருப்பதை அறிந்த நம்பிமார்கள் கடும் கோபத்தோடு உள்ளே சென்று பதுங்கியிருந்த புலச்சியின் குரல்வளையை பிடித்து தூக்கி படுக்க வைத்து வயிற்றை கிழித்து கொன்றனர்.
இப்படி கொடூரமாக கொல்லபட்ட புலச்சியின் உயிர் பிரிந்து இசக்கி அம்மனிடம் தஞ்சமடைந்தது அப்படி தஞ்சமடைந்த புலச்சி அம்மா தாயே! அறியாமல் செய்த தவறுக்கு என் கணவரையும் கொன்று கர்ப்பிணி என்றும் பாராமல் என்னையும் கொன்று விட்டார்கள் இந்த பாவிகள்.
கர்ப்பகாலத்தில் எதை கண்டாலும் சாப்பிட மனம் தோன்றும் அதன் காரணமாக என் கணவரிடம் வாழைபழம் கேட்டு அதை என் கணவரும் கொண்டுவந்து தந்த களவு குற்றத்திற்கு அநியாயமாக என் கணவரையும் கர்ப்பமாக இருந்த என்னையும் கொன்றுவிட்டனர்.
அம்மா தாயே! எங்களை பலி கொடுத்த இந்த பாவிகளை பழிவாங்க எனக்கு வரம் தர வேண்டும் அம்மா என புலச்சி இசக்கி அம்மனின் திருகாலடியை பற்றிக் கொண்டு கதறினாள்.
புலச்சியின் குரல் கேட்டு மனம் உருகிய இசக்கி அம்மன் அம்மா கவலைபடாதே உன் இறப்புக்கு நியாயம் கிடைக்கும், குலைகளை களவு செய்து உண்டு அதனால் என் காலடியில் உயிரைவிட்டபடியால் எனது பெயரை ஒட்டி குலை வாழை இசக்கி என நீ அழைக்கப்படுவாய் என பெயர் சூட்டி புலையனின் உயிரையும் அழைத்து கட்டை தாட்டி இறந்ததால் இன்று முதல் உன்னை கழுக்காரன் என மக்கள் அழைப்பார்கள் என்றும் இருவருக்கு பெயர் சூட்டினார் இசக்கி அம்மன். அதன் பிறகு அம்மா புலச்சி உனது பழியை தீர்த்து கொள்ள தகுந்த காலம் வரும் அதுவரை வாழைத் தோட்டதிலேயே காத்திரு என்று இசக்கியம்மன் வரம் கொடுக்க குலைவாழை இசக்கி அம்மன் அடவி மலை பகுதியிலுள்ள ஊருக்குள் இருந்த வாழை தோட்டத்தில் இருந்த பெரிய பாறையின் மீது வந்து அமர்ந்தாள்.
ஊருக்குள் மக்கள் நெல், வாழை, சர்க்கரைவள்ளி கிழக்கு, மரவள்ளி கிழங்கு, கரும்பு, இப்படி பலதரப்பட்ட பயிர்களை விவசாயம் செய்து வந்தார்கள். அந்த மக்களின் கனவில் குலைவாழை இசக்கி தோன்றி ஊரிலிருக்கும் வாழை தோட்டத்தின் பாறையின் மீது நான் இருக்கிறேன், என்னை வழிபட்டு கொடை வைத்து விருந்து தந்து வணங்குகள் உங்களையும் உங்கள் குலத்தையும் நான் காத்து வருவேன் இல்லையென்றால் அழிந்து போவீர்கள் என சொல்ல. கனவு கண்ட மக்கள் இது ஏதோ கெட்ட கனவு என நினைத்துவிட்டு வழக்கம் போல விவசாயம் செய்ய தோட்டத்திற்கு சென்றார்கள். தீடீரென வாழைத் தோட்டத்திற்குள் யானை அங்கும் இங்குமாக ஓடியது போலவும் சிலரை யானை துரத்தியது போலவும் கண்டு உயிருக்கு பயந்து அலறியடித்து கொண்டு மக்கள் அங்கும் இங்குமாக ஓடினார்கள் பின்னர் மக்கள் திரும்பி வந்து பார்க்கும் போது தோட்டம் சேதமடையாமல் இருந்ததை கண்டு இது என்ன மர்மமாக இருக்கு என குழப்பமாக வீடு திரும்பினர். வீடு திரும்பிய ஊர் மக்கள் அனைவருக்கும் வயிற்று வலி, வாந்தி, பேதி, காய்ச்சல் வந்து அவதிபட்டனர். அன்று இரவு மீண்டும் குலை வாழை இசக்கி அனைவரின் கனவிலும் தோன்றி அடே! நான் குலை வாழை இசக்கியடா! எனக்கு கொடை வைத்து விருந்து தரவில்லைனா அனைவரும் வாழ முடியாது என கனவில் எச்சரித்தாள் விடிந்த பிறகு அனைவருக்கும் ஒரே கனவு தான் வந்திருக்கு என அக்கம் பக்கத்தில் பேசி தெரிந்து கொண்ட மக்கள் ஒன்றாக சேர்ந்து அம்மா குலை வாழை இசக்கி உனக்கு கொடை வைத்து தருகிறோம் எங்களை காப்பாற்று எங்கள் குலத்தை காப்பாற்று என வேண்டினார்கள்.
மக்கள் வேண்டியவுடன் அனைவருக்கும் இருந்த வயிற்று வலி, வாந்தி, பேதி, காய்ச்சல், நின்று போனது. உடனே அடவி மலை மக்கள் தங்கள் குல தெய்வமாக குலைவாழை இசக்கியை வணங்கி வழிபட்டு கொடை நடத்தி அம்மனுக்கு ஆடு வெட்டி விருந்து படைத்தனர். குலைவாழை இசக்கி அம்மன் மனம் குளிர்ந்து அவர்களின் குல தெய்வமாக அவர்களை காத்து கஷ்டம் என வரும் பிள்ளைகளுக்கு அந்த கஷ்டத்தை போக்கி நல்ஆசியும் அருளும் வழங்கி வருகிறார்.
குறிப்பு:
அருள்மிகு குலதெய்வம் குலைவாழை இசக்கி அம்மைக்கு 60 வகையான சக்திகள் எப்படி கிடைத்தது என்பது பற்றியும் நம்பிமார்களை எப்படி பழி தீர்த்தார் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள கட்டாயம் குலதெய்வம் அருள்மிகு மன்னன் கருங்காளி 21 வாதைகள் கதையை தெரிந்து கொள்ள வேண்டும் இரு கதைகளும் ஒரே இடத்தில் வந்து முடியும்.
அருள்மிகு குலதெய்வம் வண்ணார மாடன் கதை.
திருநெல்வேலியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையப்பர் கோவில் காரியஸ்தராக இருந்தவர் வடமலையப்பபிள்ளை இவர் முன்பு ஒரு சமயம் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்தார் அங்கு அவருக்கு சிவனாண்டி என்பவர் அறிமுகமானார். சலவை தொழிலாளியான சிவனாண்டி சிவன் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாகவும் குடும்ப வாழ்க்கை மீதுள்ள வெறுப்பின் காரணமாகவும் காசிக்கு சென்று இருந்தார். தமிழர்கள் என்ற வகையில் இருவரும் நண்பர்கள் ஆனார்கள் அப்போது தனது குடும்ப நிலையை வடமலையப்பனிடம் கூறி வருத்தப்படுகிறார் சிவனாண்டி மேலும் தனது மகன் மகள் மற்றும் மருமகன் நாஞ்சில் நாட்டில் பூதப்பாண்டி என்னும் ஊரில் இருப்பதாகவும் அங்கு அவர்கள் தொழில் மிகவும் நொடித்துப் போய் விட்டதாகவும் கூறி வடமலையப்பனிடம் உதவி கேட்கிறார். தகுந்த சந்தர்ப்பம் வரும்போது நிச்சயம் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்கிறேன் என்று சிவனாண்டியிடம் உறுதிக் கொடுத்த வடமலையப்பபிள்ளை ஒரு மாத கால காசி யாத்திரையை முடித்துக் நெல்லை திரும்புகிறார்.
அவர் ஊர் திரும்பிய நேரம் பார்த்து ஊரில் கடுமையான பஞ்சம் நிலவியது சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் புறத்தை சேர்ந்த ஏழு ஊர்களிலும் விவசாயம் பாழ்பட்டு மக்கள் வேதனை அடைந்தார்கள்.
இதை அறிந்த வடமலையப்பபிள்ளை நெல்லையப்பர் கோவிலுக்கு பாத்தியப் பட்ட ஆயிரம் கோட்டை நெல் விளையும் விவசாய நிலங்களில் பயிர் செய்து பிழைத்துக் கொள்ளுமாறு 7 ஊருக்கு நாட்டாமையாக இருந்த செம்பர கொடுப்பனிடம் ஒரு பட்டையம் போட்டு கொடுத்தார். மேலும் விளைச்சலின் ஒரு பகுதியை கோவிலுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அந்த ஏழு ஊர்களில் என்னிடம் கேட்காமல் யாரையும் புதிதாக குடியமர்த்த கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்.
அதை ஏற்றுக் கொண்டார் செம்பர கொடும்பன் பின் சில நாட்களுக்கு பிறகு அந்த ஊர்களில் துணி துவைத்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளி பஞ்சம் பிழைக்க வேறு ஊருக்கு சென்று விட்டார் இதனால் ஏழு ஊருக்கும் துணி துவைக்க புதிய ஆள் தேவைப்பட்டது.புதிதாக யாரையும் குடியமர்த்த கூடாது என்று பிள்ளை உத்தரவிட்டு இருந்ததால் துணி துவைக்க ஆட்கள் வேண்டும் என்பதை அவரிடமே சென்று முறையிட்டார் செம்பரகொடும்பன்.
இதை கேட்ட உடனே வடமலையாருக்கு சிவனாண்டியின் நினைவு வர சிவனாண்டி மகன் நீலவண்ணான் மற்றும் அவரது தங்கையையும் அவரது கணவரையும் வரவழைத்து இருக்க வீடும் மூன்று வேளை உணவும் கொடுத்து துணிகளை வெளுக்க கூலி கொடுங்கள் என்று உத்தரவிடுகிறார். அதை ஏற்றுக் கொண்ட செம்பர கொடும்பன் அவரது ஏழு தம்பிகளுடன் பூதப்பாண்டி சென்று அவரை பார்த்து அழைக்க அவரோ தனது தங்கைக்கும் மைத்துனருக்கும் இப்போது வேலை இல்லை எனவே நான் வரவில்லை அவர்களை மட்டும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி தனது தங்கை மாடியம்மாளையும் அவரது கணவர் மட வண்ணாரையும் அவர்களுடன் அனுப்பி வைத்தார்.
அதன் பின் நெல்லை மாவட்டம் சேந்தமங்கலத்தில் மட வண்ணாரும் மாடியம்மாளும் குடியேறினர் வீடும் உணவும் செலவில்லை என்பதால் வாங்கும் கூலி அவர்களுக்கு மிச்சமானது அவர்கள் வாழ்வும் உயர்ந்தது. ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு குறை இருந்தது அது அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதுதான் வீட்டின் அக்கம்பக்கத்தினர் கூறியதன் பேரில் குழந்தை வரம் வேண்டி நெல்லை சங்கரன் கோவிலுக்கு சென்று நெல்லையப்பரை மாதந்தோறும் கடைசி வெள்ளிக் கிழமைகளில் தம்பதியினர் இருவரும் வழிபட்டு வந்தனர். இருபத்தி ஒன்றாம் மாதம் வெள்ளிக் கிழமையில் இரவு பூஜையின் போது மாடியம்மாள் சங்கரநயினார் சன்னதியில் கண்ணீர் விட்டு அழுதார் அப்போது அந்த இடம் வந்த துறவி ஒருவர் தாயே இங்கு வா! சங்கரநாராயணன் அருளால் இன்றிலிருந்து பத்தாவது மாதம் உனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றார். அந்த குழந்தை அறிவுக் கூர்மையோடு திகழும் அவனுக்கு 21ஆவது வயதில் கண்டம் ஏற்படும் அவன் அதை தாண்டி விட்டால் கட்டாயம் நூறு வயது வாழலாம் என்று கூறியபடியே திருநீறு கொடுத்தார்.
துறவி சொன்னபடியே மாடியம்மாள் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் அவனுக்கு வாசமுத்து என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் வாசமுத்து மிகவும் அறிவுக்கூர்மையுடன் வளர்ந்து வந்த வாசமுத்து தன்னுடைய 16வது வயதில் பூதப்பாண்டியில் உள்ள தனது தாய் மாமன் வீட்டு வருகிறார். அப்போது மாமாவோடு வெளியே செல்கிறான் மாமா தொழிலுக்கு போகிறேன் நீ வீட்டிலேயே இரு என்று மாமா கூற என்ன தொழில் நானும் வருகிறேன் என்று வாசமுத்து மாமாவோடு செல்கிறார். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் களிப்பு கழித்தால் என்ற மந்திரத்தை வாசமுத்து மாமா நீல வண்ணார் செய்கிறார் அதை பார்த்ததும் வாசமுத்துவுக்கு தானும் மாந்திரீகம் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது இதை தனது தாய் மாமன் நீல வண்ணானிடம் கூற அவர் எனக்கு இது மட்டும் தான் தெரியும் நீ வசிய மாந்திரீகம் முதலான எல்லா மந்திரத்தையும் நன்று கற்று வா என்று கூறி திருவனந்தபுரத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.
மாந்திரீகத்தை நல்ல முறையில் கற்றுத் தேர்ந்தான் வாசமுத்து சேந்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாந்திரீகத்தில் நல்ல பெயரோடு திகழ்ந்தான்.
கண் திருஷ்டி கழித்தல் பேய் விரட்டுதல் வியாபார வளர்ச்சிக்கு வழிவகுத்தல் காணாமல் போன பொருட்களை மை போட்டு பார்த்தால் என பலவிதமான மாந்திரீகத்தில் கை தேர்ந்து விளங்கினர் வாசமுத்து தனது மருமகனின் வளர்ச்சியைக் கண்டு பெருமை கொண்ட நீல வண்ணார் தனது மகள் சாத்தியம்மாளை அவனுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆன்மீகத்தில் சிறந்து விளங்கினாலும் மற்ற நேரங்களில் தனது பெற்றோருடன் துணி துவைப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார் வாசமுத்து இப்படியாக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார் வாசமுத்து.
வாசமுத்துவின் நெருங்கிய நண்பனின் பெயர் புதியவன் அந்த புதியவனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என அவனது பெற்றோர்கள் விரும்பினார் ஆனால் வாசமுத்தோடு நட்பு வைத்திருந்த காரணத்தை காட்டி புதியவனுக்கு அவனது சமூகத்திலும் சுற்றத்திலும் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை இதை வாசமுத்துவிடம் கூறி கவலைப்பட்டான் புதியவன் அவனுக்கு ஆறுதல் கூறிய வாசமுத்து கவலைபடதே நண்பா என்னால் முடிந்த உதவியை உனக்கு கட்டாயம் செய்கிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளுத்த துணிகளை கொடுக்க செல்கிறான்.
அந்த ஊர் தலைவர் செம்பரகொடும்பனுக்கு ஏழு தம்பி மார்களும் சோனமுத்து என்ற தங்கையும் உண்டு ஒரே ஒரு தங்கை என்பதால் சோனமுத்துவை அண்ணன்மார்கள் செல்லமாக வளர்த்து வந்தார்கள்.
ஒரு நாள் செம்பர கொடும்பன் வீட்டிற்கு வெளுத்த துணியை கொடுக்க சென்றார் வாசமுத்து வீட்டில் யாரும் இல்லாததால் துணியை வாங்க வெளியே வருகிறார் சோனமுத்து உறவினர்களைத் தவிர வேறு ஆண்கள் யாரையும் பார்த்திராத சோணமுத்து முதன் முதலாக வாசமுத்துவை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வசப்படுகிறாள் அவளது பார்வையின் அர்த்தம் என்னவென்று தெரிந்ததும் தனக்கு திருமணம் முடிந்ததை கூறி உனது ஆசை பலிக்காது பெண்ணே என வாசமுத்து அறிவுரை கூறுகிறினார் அதை கேட்டு பின் அவனிடம் சோனமுத்து தனது ஆசைகளை எடுத்துக்கூறினாள் உங்களை கண்டவுடனே காதல் கொண்டதாகவும் உங்கள் மீசை மிகவும் அழகு எனக்கு பிடித்து இருக்கிறது எனவும் அவளது உள்ள ஆசையை வெளிபபடுத்தினாள் சோனமுத்து.
அறிவுரை கூறியும் கேட்க மறுத்து அவளது பேச்சுக்களை மனதுக்குள் அசைப் போட்டபடி வாசமுத்து தனது வீடு நோக்கி நடந்தான் எதிரே அவனது நண்பன் புதியவன் தென்படுகிறான் அவனிடம் நடந்ததை கூறுகிறான்.
இதை கேட்டு புதியவன் இது என்னடா ஏற்கெனவே திருமணம் ஆன உன்னிடமா காதல் என நகைத்தான் இந்த நேரத்தில் வாசமுத்துவுக்கு ஒரு யோசனை சோனமுத்துவை எப்படியாவது புதியவனுக்கே திருமணம் செய்து வைத்து விட்டால் என்ன என்று முடிவு செய்து அவனிடம் சோனமுத்து ராணி மாதிரி இருக்க நீ ஏன் பெண்ணிற்காக ஊரெல்லாம் அலைகிறாய் சோனமுத்துவை உனக்கு மணமுடித்து தருகிறேன் என்று கூறுகிறான். இதை கேட்டதும் புதியவன் அது எப்படி சாத்தியமாகும் அவள் பெரிய இடத்து பெண் நானோ தின கூலி என்று கேட்க உடனே வாசமுத்து வசிய மை வைத்து சோனமுத்துவை உனக்கு மயக்கி தருகிறேன் என்று கூறினான்.
புதியவனுக்கு சோனமுத்துவை மணம் முடித்துத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்த நிலையில் கொடுத்த வாக்கையும் மீறி சோனமுத்துவின் அழகில் மயங்கிப் போன வாசமுத்து மனதில் ஏற்பட்ட லேசான சலனத்தால் அவளை தன்னுடையவளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறான்.
சோனமுத்துவின் மீது கொண்டிருந்த ஆசையே வாசமுத்துவுக்கு
எமனாக மாறி போனது. சில நாட்கள் நகர்ந்த நிலையில் யாரும் இல்லா நேரம் பார்த்து மீண்டும் செம்பரகொடும்பன் வீட்டிற்கு துணி கொடுக்க எடுத்துச் சென்றான் வாசமுத்து அங்கு சென்றதும் தான் மறைத்து வைத்திருந்த வசிய மையை சோனமுத்துவின் புருவத்தில் தடவி விட அவ்வளவுதான் மறுகணமே வாசமுத்துவிடம் மயங்கி விடுகிறாள் இருவரும் ஆற்றங்கரையோரம் இருந்த வாசமுத்துவின் தனிமையான குடிசையில் அடிக்கடி சந்தித்து உறவு வளர்த்து வந்தார்கள் இதை அறிந்த புதியவன் தனக்கு சோனமுத்துவை வசியம் செய்து தருவதாகக் கூறி அவளை அவனை சேர்த்துக் கொண்டான் என்று ஆதங்கப்பட்டு அவன் மீது பகையுணர்வு கொண்டான்.
ஒருநாள் மதியவேளையில் புதியவன் பனை மரத்தில் பதநீர் இறக்கி கொண்டிருக்கும்போது குடிசை வீட்டுக்குள் வாசமுத்துவும் சோனமுத்துவும் செல்வதை பார்க்கிறான் இதற்கு முடிவு கட்டுகிறேன் என திட்டமிட்டான்.
அன்று மாலை தன்னிடம் பதநீர் குடிக்க வந்த செம்பரகொடும்பன்
தம்பிமார்கள் அளவு குறைவாக இருப்பதாக கூறி இப்படியே நீடித்தால் உனது பனையும் இருக்காது உனது பிழைப்பும் இங்கு நடக்காது என்று மிரட்ட ஆரம்பித்தார்கள் தன்னுடைய நண்பன் மீது பகை உணர்வில் இருந்த புதியவன் உங்கள் கோபத்தை என்கிட்ட காட்டாதீங்க ஆற்றங்கரையோரம் ஓட்டை குடிசையில் சலவைக்காரன் கூட ஒண்ணா இருக்கிற உங்க தங்கச்சியிடம் காட்டுங்கள் என்று கூறுகிறான் இதை கேட்டு சினம் கொண்ட செம்பரகொடும்பன் தம்பிமார்கள் இதை நிரூபிக்க சொல்கிறார்கள் மேலும் நீ சொல்வது பொய்யாக இருந்தால் உனது உடலில் தலை இருக்காது என்று மிரட்ட ஆரம்பித்தார்கள் அப்போது புதியவன் நான் பேசுவது சத்தியம் இதை நிரூபிக்க நான் தயார் என்றும் சரியாக நாளை மாலை ஆற்றங்கரையோரம் வாருங்கள் நான் சைகை காட்டுகிறேன் அப்புறமா இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடியுங்கள் என்று கூறுகிறான் சரி என்று சொல்லிவிட்டு அண்ணன் தம்பி 7 பேரும் அந்த இடத்தை விட்டுச் செல்கிறார்கள்.
மறுநாள் மாலைப் பொழுது அவர்கள் புதியவன் சொன்னபடி ஆற்றங்கரைக்கு வருகிறார்கள் பனைமரத்தில் புதியவன் இருக்கிறான் அந்த நேரம் வாசமுத்துவும் சோனமுத்துவும் வரும் பிணி என்னவென்று தெரியாமல் இணைகிறார்கள் உடனே புதியவன் அறிகுறியாக தனது தலைபாகை துணியை எடுத்து பனை மரத்திலிருந்து அசைக்க செம்பரகொடும்பன் தம்பிமார்கள் 7 பேரும் குடிசைக்குள் செல்கிறார்கள் அவர்களை கண்ட வாசமுத்து பூனையாக மாறி அங்கிருந்து வெளியேறிய பின் சுயரூபம் கொண்டு ஓடுகிறான் அவனை பின் தொடர்ந்து சென்ற அண்ணன் தம்பி 7 பேரும் அவனை பிடித்து அடிக்கிறார்கள் ஆனால் என்ன ஆச்சரியம் எந்தவிதமான காயமும் வலியும் பாதிப்பும் வாசமுத்துவுக்கு ஏற்படவில்லை.
இந்த தகவல் செம்பரகொடும்பனுக்கு போகிறது அவர் வந்து அவரது தம்பிகளிடம் தம்பிகளே இனி அவனை அடிக்க வேண்டாம் இவர்களை இங்கு குடியமர்த்திய வடமலையப்பரிடம் அழைத்துச் செல்வோம் என்று கூறி வாசமுத்துவை 21 சங்கிலியால் கட்டி கொண்டு அவர் முன் நிறுத்துகிறார்கள் வடமலையப்பர் வாசமுத்து செய்த குற்றத்தை கேட்டு குற்றத்திற்கு தண்டனையாக வாசமுத்துவை தர்மசாஸ்தா கோவில் (அய்யனார்) அருகே வைத்து மாறுகை மாறுகால் வாங்கி கொன்று விடும்படி உத்தரவிடுகிறார்.
அதன்படியே தண்டனையை நிறைவேற்ற செம்பரகொடும்பன் தம்பிமார்கள் வாசமுத்துவின் மாறுகை மாறுகால் வாங்கி விடுகிறார்கள் ஆனால் வாசமுத்து இறக்கவில்லை மீண்டும் மீண்டும் உயிர் பிழைத்து வந்தான் எத்தனை முறை வெட்டினாலும் அவன் இறக்காமல் உயிர் பிழைத்து முழுமையாக வருவதை கண்டு மாயமாக இருக்கிறது என ஊர் மக்கள் மந்திரங்கள் கற்று தேர்ந்த வாசமுத்துவை கொல்வது அவ்வளவு சுலபமல்ல என என்ன செய்வதென்று அறியாமல் செம்பரகொடும்பன் தம்பிமார்கள் முழிக்க அதை பார்த்து வாசமுத்து பலமாக சிரிக்க ஆரம்பித்தான்.
பின் மூடர்களே எனது உடலில் கழுத்து நெஞ்சு மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் ஸ்ரீசக்கரம் இருக்கிறது அதை எடுத்தால் மட்டுமே என் உயிர் போகும் நல்ல வாழ்க்கையை வாழ்ந்தேன் ஆனால் ஏதோ எனது கெட்ட கிரகம் என்னை இப்படி ஒரு இழிவான நிலைக்கு கொண்டு வந்து விட்டது இனி நான் உயிர் வாழ விரும்பவில்லை எனவே என்னை அழிக்க நானே உதவுகிறேன் முதலில் என் உடலில் உள்ள சக்கரங்களை மந்திரத்தால் அகற்றுங்கள் என்று கூறுகிறார். அதன்படி உடலில் இருந்த மூன்று சக்கரங்களையும் மந்திரீகத்தால் அகற்றிய பின் வாசமுத்து உயிர் பிரிந்து போனது அவனது உடலைத் தகனம் செய்யும் போது அவனது மனைவி சாத்தியம்மாள் உடன்கட்டை ஏறினால் அப்போது வீட்டில் இருந்து தலைவிரி கோலமாக ஓடிவந்த சோனமுத்துவும் உடன்கட்டை ஏறினார்கள் இருவரும் இறந்து போனார்கள்.
அன்றிலிருந்து எட்டாவது நாள் செம்பரகொடும்பனை தவிர தன்னைக் கொன்றவர்கள் அனைவரையும் பழி வாங்கினார் வாசமுத்து தன்னை காட்டிக் கொடுத்த நண்பன் புதியவன் பனையில் ஏறி இருக்கும் போது மாயமாக வந்த வாசமுத்து பொந்து தடியால் அடிக்க கீழே விழுந்து எழுந்திருக்க முடியாத நிலையில் மன்னிப்பு கோருகிறான் நண்பனுக்கு இரக்கம் காட்டிய வாசமுத்து சரி மன்னித்தேன் காலை உதறி எழுந்து போ என்று கூற அதற்கு முடியாமல் பனையிலிருந்து விழுந்ததால் எழுந்து நடக்க முடியவில்லை என சொல்ல இதோ என் தடியை பிடித்து எழுந்து நட என்று வாசமுத்து தனது பொந்துதடியை கொடுக்க அதை வாங்கி கொண்ட புதியவன் தனக்கும் வாழ விருப்பமில்லை என்னை அழைத்துக்கொண்டு போ என கூற உடனே புதியவன் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்தது.
அதன்பின் இரண்டு பேரும் ஆவியாக அப்பகுதியில் பெரும் அட்டகாசம் செய்து வந்தார்கள் இதை அறிந்த செம்பரகொடும்பன் தனது காவல் தெய்வமான அவரங்காட்டு சாஸ்தாவிடம் (அய்யனார்) முறையிட சாஸ்தா அவர்கள் இருவரையும் சாந்தப்படுத்தினார்.
சாந்தமான வாசமுத்துவும் புதியவனும் இனி மக்களுக்கு தொந்தரவுகள் கொடுக்க மாட்டோம் என கூறி சிவபெருமானின் அருளை பெற்று பூலோகத்தில் காவல் தெய்வமாக இருந்து அருள்புரிய வரம் வேண்டினார்கள் அதை சிவப்பெருமான் தந்தருளவே திருநாமத்தையும் வரங்களையும் கொடுக்கிறார்.
மகனே வாசமுத்து எந்த மந்திர தந்திர சித்து விளையாட்டுகளும் உன்னிடம் பலிக்காது பூலோகத்தில் நீ மந்திரமூர்த்தியாக திகழ்வாய் என வாசமுத்துவுக்கு வரம் அளிக்கிறார் சிவப்பெருமான்.
அதன் பின் பொந்துதடியால் அடிவாங்கி தெய்வமான புதியவனை நோக்கி சிவபெருமான் மகனே உன்னை மக்கள் தடிவீரன் என வணங்கி உன்னிடம் அருள் பெறுவார்கள் நீ கையிலிருக்கும் தடியால் உன்னை நம்பி வணங்கும் மக்களுக்கு வினை தீர்ப்பாய் என சிவப்பெருமான் புதியவனுக்கும் பெயர் நாமத்தை சூட்டுகிறார்.
இவ்வாறு வரங்களையும் சிவப்பெருமானின் அருளை பெற்ற இருவருக்கும் சேந்தமங்கலம் ஊரில் ஆலயம் கட்டி வழிபாடு நடத்த வேண்டும் என்று செம்பரகொடும்பன் கனவில் தோன்றிய சாஸ்தா சொல்ல.(சாஸ்தா என்ற பெயர் அய்யனாருக்கும் உடையது) இதை கனவில் கண்ட செம்பரகொடும்பன் வாசமுத்துவிற்கும் புதியவனுக்கும் ஆலயம் கட்டி ஊர் மக்கள் சேர்ந்து வழிபட ஆரம்பித்தார்கள்.
பின் நாட்களில் மந்திரமூர்த்தி புகழ் பட்டிதொட்டி எல்லாம் பரவி பலதரப்பட்ட மக்களும் மந்திரமூர்த்திக்கு பலியிட்டு பூஜை செய்து வணங்கி வந்தார்கள் மந்திரமூர்த்தி அவர் சமூகம் சார்ந்த மக்கள் மற்றும் வேறு பல மக்களால் வண்ணாரமாடன் என்று வணங்கப்படுகிறார். இந்த பெயரே காலப்போக்கில் பிரசித்தி பெற்ற பெயராக மாறிப்போனது.
வண்ணார மாடன் நினைக்கும் உருவம் எடுக்கவும் மாந்தீரகம் ஏவல் சித்து வேலைகளை செய்யவும் தெரிந்தவர் மாந்திரீக மந்திரவாதிகளுக்கு சக்கரவர்த்தி ஆவார். வண்ணாரமாடன் வணக்கும் பிள்ளைகளுக்கும் அவர் குடும்பத்தார்க்கும் மாந்திரீகம் செய்து ஏவல் செய்பவர்களுக்கே அதை திருப்பி பதிலடி கொடுக்கும் அளவுக்கு மந்திர சக்திவாய்ந்த குல தெய்வம் ஆவார்.
வண்ணாரமாடன் படையல் போட்டு வணங்கும் முறை.
வண்ணாரமாடனுக்கு சிறப்பு பூஜை படையல் போட்டு வணங்கும் போது அவரது பீடத்தில் தலைப்பாகை கட்டி வைத்து கற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும். மது, மாமிசம், கள்ளு, படையலுக்கு விருப்பமானவர் மேலும் வண்ணாரமாடனுக்கு மிகவும் பிடித்த படையல் மீன் மாமிச படையல், மற்றும் கருவாடு சுட்டு படையல் போடுவது ஆகியன ஆகும். எனவே பெரும்பாலான வண்ணாரமாடன் கோயில்களில் முரல் மீன் கருவாடுகளை சுட்டு படையல் போடுவார்கள் மிக மகிழ்ச்சியாக அதை ஏற்றுக்கொள்வார் கேட்ட வரங்களையும் கொடுப்பார்.
ஓம் வண்ணாரமாடனே போற்றி!
குறைகளை தீர்க்கும் குல தெய்வ வழிபாடு.
முன்னோர்களின் குலதெய்வ வழிபாடு பலன்கள்.
குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக விளங்கிய புண்ணிய ஆத்மாக்கள். அந்த புண்ணிய ஆன்மாக்கள் தங்கள் குலத்தை காக்க பல சக்திகளை படைத்தவர்கள். அதனால்தான் அந்த தெய்வங்கள் குல தெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றனர். குல தெய்வம் நமது குலத்தினை காக்கும் காவல் தெய்வமாகும். குல தெய்வத்தை குல தேவதைகள் எனவும் அழைக்கலாம். நாம் வணங்கும் தெய்வங்களில் குல தெய்வமே சக்திவாய்ந்த வலிமையான தெய்வம். எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் குல தெய்வத்திற்கே முதல் பூஜை போட வேண்டும். அதன் பிறகு வேறு தெய்வங்களுக்கு பூஜை செய்ய வேண்டும்.
கஷ்டங்கள் நீங்க வேறு இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை பரிகாரங்கள் செய்யும் முன் குலதெய்வத்திற்கு பூஜை செய்ய வேண்டும் பரிகார பூஜை நல்லபடியாக நடக்க வேண்டுமென்று மனதில் நன்றாக பிராத்தனை செய்ய வேண்டும். அவ்வாறு குலதெய்வத்திற்கு முதலில் பூஜை செய்யாது போனால் செய்யும் பரிகார பூஜை பலனளிக்காது கஷ்டங்களை போக்க வேறு இஷ்ட தெய்வத்திற்கு பூஜைகள் செய்து பரிகாரங்கள் செய்வது பலன்தராது.
குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது ஏனெனில் ஒருவரின் குலத்தை வேரூன்றி ஆலமரமாக வளர்க்க வேண்டுமென்றால் குலதெய்வ வழிபாடு அவசியம்.
குல தெய்வ வழிபாட்டில் குறையிருந்தால் மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதியோ, அனுசரணையோ இல்லாமல், சக்தி வாய்ந்த ஹோமமோ, யாகமோ, கோவில்களுக்குச் செல்வதோ எதிர்பார்த்த பலனைத் தருமா என்பது சந்தேகமே.
வீடு, கதவு, நிலம்,தங்கம்,வெள்ளி,வைரம், நகைகள், என அனைத்தையும் காசு கொடுத்து வாங்கலாம். ஆனால் கல்வி, குழந்தைப்பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் அனைத்தும் அருளால் மட்டுமே கிடைக்கும்.
குலத்தெய்வம் நமக்கு கருணையும் அருளையும் எளிதில் வழங்ககூடியது.
குலத்தெய்வத்தை பெரும்பாலும் நீங்களும் உங்களின் பிள்ளைகளும் சிறு தெய்வமாகவே பார்க்கிறீர்கள். ஆனால் அதன் சக்தி அளவிட முடியாதது. உங்கள் குடும்பத்தில் ஏற்படும் துன்பங்களை தீர்ப்பதற்க்கு குல தெய்வத்தின் சக்தியை அறிந்து உறுதியாக நம்பிக்கையோடு வணங்க வேண்டும். எமன் கூட உங்களின் தெய்வத்தின் அனுமதியுடன் தான் உயிரை எடுக்க முடியும்.
குலதெய்வம் தவிர வேறு தெய்வங்களை வணங்கலாமா.
வேறு தெய்வங்களை வணங்கலாமா என்றால் ஆம் நிச்சயமாக வணங்கலாம். ஆனால் எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.இந்த கட்டுரையின் மூலமாக நாங்கள் சொல்ல நினைப்பது ஒன்று தான் உங்களுக்கு கிடைக்கும் நல்லது கெட்டது அனைத்தும் குல தெய்வத்தின் அருளால் தான் கிடைக்கும்.
நல்லது என்றால் குடும்பத்தில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள், நல்ல காரியங்கள்,தொழிலில் வெற்றி,ஊரில் நற்பெயர்கள், நினைத்த காரியம் தாமதமில்லாமல் நடக்கும், திருமணம் கைகூடும், குழந்தைவரம் கிடைக்கும் இப்படி எல்லாமே நமது குல தெய்வம் மகிழ்ச்சியாக இருந்தால் உங்களுக்கு உடனடியாக கிடைக்கும் வேறு தெய்வங்களிடம் நீங்கள் வைத்த வேண்டுதலின் படி நன்மைகள் கிடைத்தாலும் குலதெய்வத்தின் அருள் இல்லையென்றல் உங்களுக்கு வேறு தெய்வங்களின் ஆசியும், அருளும், நன்மையும், சரியாக சரியான நேரத்தில் கிடைக்காது தாமதமாக தள்ளி போட்டுக்கொண்டே நல்ல விஷயங்கள் போகும்.
கெட்டது என்றால் குல தெய்வம் எப்படி நல்லதை கொடுக்க வல்லதோ அதேப் போல கெட்டதையும் கொடுக்கும் குடும்பத்தில் ஒற்றுமையில்லாமல் குல தெய்வத்தை கண்டு கொள்ளாமல் விட்டால் தொடர்ந்து துன்பங்கள் நடக்கும், கெட்ட கனவுகள் பயமுறுத்தும், திருமண வரன் தள்ளிபோகும், குழந்தை வரம் தள்ளிபோகும், குடுமபத்தில் அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படும் ஆனால் துன்பங்கள் உங்களை முடக்கி போடாது நல்லது நடப்பதை தாமதபடுத்தும் நீங்க மனசு மாறி குலதெய்வத்தை தேடிவந்த உடனே மனம் குளிர்ந்து உங்கள் துன்பங்களை தானே ஏற்றுகொள்ளும் அளவுக்கு உங்கள் மேல் அருளும் அன்பும் இருக்கும் குல தெய்வத்திடம். குழந்தையிடம் கோபத்தை காட்டும் தாயை போல தான் நம்மிடம் குலத் தெய்வங்கள் கோபப்படுகிறது.
அதனால் தான் சொல்கிறோம் குல தெய்வ வழிபாடு முக்கியம் வேறு தெய்வ பக்தியும் முக்கியம் வேறு தெய்வங்கள் தரும் நல்ல நன்மைகளையும் அருளையும் பெற்று வாழ குலதெய்வ வழிபாட்டோடு வேறு தெய்வங்களையும் சேர்ந்து வணங்குங்கள்.
குலதெய்வத்தின் மகிமைகள்.
நம் குடும்பத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள குறிச் கேட்க்கும் போது குறி சொல்பவர் நம் குலதெய்வத்தைக் கூப்பிட்டுக் கேட்டு, நம்மைப் பற்றிய விவரங்களைச் சொல்லலாமே தவிர, தன்னிச்சையாக அவர்களால் எதுவும் சொல்ல முடியாது.
குலதெய்வத்தின் மகிமையை அறிந்த மந்திரவாதிகள் உங்களுக்கு செய்வினை செய்ய முதலில் உங்கள் குல தெய்வத்தை மந்திர கட்டு மூலமாக கட்டுபடுத்திவிட்டு பின் உங்களுக்கு செய்வினை செய்வார்.
கெட்ட காரிங்களை செய்யும் மந்திரவாதி எப்போதும் தான் வசபடுத்தியுள்ள தேவதைகள் மூலமாக மற்றவர்களின் குல தெய்வங்களின் விவரங்களை பெற்று குல தெய்வத்தை பலவினபடுத்தி கெட்ட காரிங்களை செய்கிறார்.
மந்திரவாதிகளால் கட்டப்படும் குல தெய்வங்களும் உண்டு அதற்க்கு மாறாக குடும்பத்தாருக்கு ஆபத்து என்றவுடன் எந்த மந்திர கட்டையும் அறுத்து வெளிவந்து அதை செய்தவரையும் மந்திரவாதியையும் அழித்த குலதெய்வ கதையும் உண்டு.
குல தெய்வம் சக்தி வாய்ந்த தெய்வமாக இருக்க தவறாமல் பூஜை செய்து தெய்வத்தின் சக்தியை அதிகப்படுத்த வேண்டும் நீங்கள் வணங்க வணங்கதான் குலதெய்வத்தின் சக்திகள் பெருகும். குடும்பத்தார் தனது சந்ததிகளுக்கு குல தெய்வ மகிமையை சொல்லி எப்போதும் வணங்கிவர வேண்டும்.
பெண்கள் மற்றும் குல தெய்வங்கள்.
பெண்கள் இரண்டு குல தெய்வங்களை வழிபட இறைவன் அவர்களை படைத்துள்ளார். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் கணவரின் ஒரு தெய்வம் திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுபவர்கள். திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டின் குலதெய்வத்தை வழிபடத் தொடங்குகின்றனர்.
பெண்கள் திருமணத்திற்க்கு பிறகு தான் பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வழிபாடுவது கிடையாது. பிறந்த வீட்டு குலதெய்வத்தை வருடத்திற்கு ஒருமுறையாவது வழிபட்டால் வருடம் முழுவதும் காப்பாற்றப்படுவார்கள். அது புகுந்த வீட்டில் எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது.
பெண்கள் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை இதுவரை யாரும் வழிபடவில்லை என்றால் பண்டிகை காலங்களில் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுங்கள்.
குல தெய்வத்தின் சக்திகள்.
நமது கர்மவினையை கூட நீக்கும் சக்தி படைத்தவை. கர்மவினைகள் அதிகம் உள்ளவனுக்கும் குலதெய்வம் பற்றிய எண்ணம் இருக்காது. கர்ம வினையால் குலதெய்வத்தை மறந்து இன்றும் சில குடும்பங்கள் தனது குல தெய்வம் யார் என தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
குலதெய்வத்தை அறியாமல் செய்யும் எந்த வழிபாடுகளும்,பூஜைகளும், பரிகாரங்களும், மந்திர மந்திரங்களும் பயனற்றவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வீட்டில் திருமணத் தடையும், தொழில் வருமானம், குழந்தையின்மை, ஆரோக்கிய குறைபாடுகள் போன்ற அனைத்து கெட்ட காரியங்களும் தடைகளும் குல தெய்வ வழிபாடு சரியாகும்.
சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள் மேற்கண்ட தடைகளை குலதெய்வத்தை வணங்காத காரணத்தால் குல தெய்வம் தான் ஏற்படுத்துகிறது என்று இல்லை நமது கர்மவினையால் இவை நடக்கிறது குல தெய்வ வழிபாடு அதை சரிசெய்ய அருள்புரியும்.
நமக்கு எதிரான அனைத்து தீய சக்திகளையும் அழிக்கும் ஆற்றல் குல தெய்வத்திற்கு உண்டு.தன் குழந்தைகளின் நலனுக்காக எல்லா தெய்வங்களிடமும் குல தெய்வம் முறையிடும்.
குல தெய்வ கோவிலுக்கு அடிக்கடி செல்ல முடியவில்லையா.
குல தெய்வ கோவிலுக்கு அடிக்கடி செல்ல முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் உள்ள குல தெய்வ உருவபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான முறையில் மனம் உருகி பூஜை செய்யுங்கள் கண்டிப்பாக உங்கள் குல தெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்
குலதெய்வ வழிபாட்டில் தோஷங்கள் இருந்தால்.
குலதெய்வ வழிபாட்டில் தோஷங்கள் ஏற்படும் போது விரும்பிய காரியங்களை நிறைவேற்றுவதில் சிரமம், பொருளாதார நிலையில் மந்தம், வேலை முடக்கம், உறவினர்களால் வீண் விரயம், பிள்ளைகளால் அலைச்சல், மன அமைதியின்மை தோன்றும்.
எவ்வளவு வருமானம் வந்தாலும் தாங்க முடியாத நிலையில் பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.
அனைவரும் கஷ்டங்கள் நீங்க குலதெய்வத்தை வழிபடுங்கள்.
நம் முன்னோர்கள் வருடத்தில் ஒரு முறை ஒர் குறிப்பிட்ட நாளில் நமது குலதெய்வத்தை வணங்கி, தங்கள் சொந்த பந்த உறவினர்களுடன் வழிபட்டு நிம்மதியாக வாழ்ந்தனர். அவர்களின் வாழ்க்கையில் இன்னல்கள் இருந்தாலும், அவை நீண்ட காலம் நீடிக்காது. குலதெய்வத்தின் அருளால் சூரியனைக் கண்ட பனி போல் விலகிச் சென்றுவிடும்.
ஆக, குல தெய்வ அருள் முக்கிய தேவையாகும். எனவே உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி - முடிந்தவரை சென்று வாருங்கள்.அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது சென்றுவாருங்கள்.
குல தெய்வத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்யவும். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்யுங்கள்.பின்னர் உங்கள் வாழ்க்கையின் போக்கைப் பாருங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.





