| முருகன் வள்ளி திருமண கதை |
முருகப்பெருமானை மணம் முடிக்க வேண்டும் என்பதற்காக தவம் இருந்தாள் சுந்தரவல்லி என்ற பெண். அவளுக்கு கந்தப்பெருமான் அளித்த வரம் காரணமாக சிலமுகி என்ற முனிவரின் மாய சக்தியின் காரணமாக அரபி என்ற அழகிய மானின் வயிற்றில் கருவாகி அந்த அதிசய மான் காட்டில் வேடர்கள் வள்ளிக்கிழங்கு அகழ்ந்தெடுத்த குழியில் அழகிய மானிடப் பெண் குழந்தையை ஈன்றுவிட்டு மறைந்துவிடுகிறது.
திருகுறங்குடி என்ற மலையும் காடும் சார்ந்த பகுதியை ஆண்டு வந்தான் வேடர் குல தலைவன் நம்பிராஜன். நம்பிராஜனுக்கு ஆண் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். பெண் குழந்தை மீது விருப்பம் கொண்ட நம்பிராஜன் பல நாட்கள் கடவுளிடம் பெண் குழந்தையை வேண்டினார்.இந்நிலையில் தான் நம்பிராஜன் வேட்டைக்கு செல்லும்போது வள்ளி கிழங்குகளுக்கு மத்தியில் பொன் போல மின்னியபடி ஒரு அழகிய பெண் குழந்தையை கண்டார். வள்ளிகிழங்கு குழியில் கண்டெடுத்ததால் அந்த குழந்தைக்கு வள்ளி என்று பெயரிட்டு தன் மகளாக வளர்த்து வந்தான்.
வேடர்கள் தங்களது குல தெய்வமாக முருப்பெருமானை வணங்கி வந்தனர் காலம் மெல்ல ஓடியது வள்ளியும் வளர்ந்து பருவமடைந்தாள். வேடுவர் குலத்தின் வழக்கப்படி வள்ளிக்கு தக்க பருவம் வந்ததும் வள்ளி தினைக்கு காவல் காத்து நின்றாள். ஒரு நாள் அப்பகுதிக்கு எதேச்சையாக வந்த நாரதர் வள்ளியின் அழகை கண்டு வியந்தார். முருகப்பெருமானை மணம் முடிக்க வரம் வாங்கிய சுந்தரவல்லி தான் இவள் என அறிந்த நாரதர் தணிகை மலையில் வீற்றிருந்த முருகனிடம் வள்ளியை பற்றியும் வள்ளிக்கு முருகன் மீது இருந்த பக்தியை குறித்தும் நாரதர் முருகனிடம் சொல்ல முருகனும் வேடர் உருவம்எடுத்து வள்ளியை காண தினை வயல் நோக்கி சென்றார்.
கையில் வில்லும் அம்பும் ஏந்தி அழகிய திருமேனியுடன் இளம் வேடன் ஒருவன் வள்ளி முன் வந்தான். அவனைப் பார்த்த வள்ளி, யார் நீ? நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என கோபமாக கேட்டாள்.
வேடன் வடிவில் வந்த முருகப்பெருமானோ வள்ளியின் கேள்வியை சட்டை செய்யாமல் வள்ளியை நோக்கி காதல் மொழியில் பேச ஆரம்பித்தார். ‘பெண்ணே! உன் மேல் உள்ள காதலால் உன்னை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் உன்னை பார்க்க வந்தேன். ஏன் இங்கு வந்தீர்கள் என கோபமாக கேட்டு என்னைத் துரத்தாமல் அன்புடன் பேச கூடாதா என காதல் வார்த்தைகள் கூறினார்.
முருகப்பெருமான் வள்ளியிடம் பேசிக் கொண்டிருக்கையில் வள்ளியின் தந்தை நம்பிராஜன் வேடர்கள் படையுடன் அங்கு வந்து கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்ததும் வள்ளிக்கும் பயம் வந்தது. ‘இந்த வேடன் தன்னிடம் பேசுவதைக் கண்டால் அவனை எதுவும் செய்யத் தயங்க மாட்டார்கள்’ என்று நினைத்தவள் ‘உடனே இங்கிருந்து போய்விடு என எச்சரித்தாள்.
முருகப்பெருமான் சிறிது தூரம் சென்று வேங்கை மரமாக மாறினார். அப்போது நம்பிராஜனுடன் அங்கு வந்த வேட்டுவர்கள் இந்த இடத்தில் புதிய மரம் ஒன்று நிற்பதைக் கண்டு வியந்தனர். அவர்களில் சிலர் மரத்தை வெட்ட முயன்றனர். ஆனால் அவர்களை நம்பிராஜன் தடுத்து நிறுத்தினார். இந்த மரம் வள்ளியை காக்கும் வள்ளிக்கு நிழல் தரும். எனவே அதை வெட்ட வேண்டாம் என கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதுவரை வேங்கை மரமாக இருந்த முருகப்பெருமான் மீண்டும் வேடனாக மாறி வள்ளியிடம் வந்தார். காதல் மொழி பேசினார். வேட்டைக்காரனாக வந்த முருகப்பெருமானிடம் வள்ளியின் மனம் சென்றாலும், முன்பின் தெரியாத ஆணிடம் பேசுவது தவறோ என்ற பயமும் வெட்கமும் வள்ளியின் மனதைத் தடுத்தது.
தனிமையில் இருக்கும் பெண்ணிடம் இப்படி நடந்து கொள்வது சரியல்ல என்று எச்சரிக்கும் தொனியில் பேசினாள் வள்ளி.
மீண்டும் அடுத்த நாள் முருகப்பெருமான் முதியவர் வேடத்தில் வந்தார். தனக்கு மிகவும் பசியாக இருப்பதாகவும், வள்ளியிடம் சாப்பிட ஏதாவது கொடுக்குமாறும் கேட்டார். கருணை கொண்ட வள்ளி தினை மாவையும் தேனையும் கலந்து முதியவரிடம் கொடுத்தாள். சாப்பிட்டு முடித்ததும், தாகமாக இருக்கிறது, தண்ணீர் வேண்டும் என்றார். அவள் அந்த முதியவனை அங்கிருந்த சுனைக்கு அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்க வைத்தாள்.
தாகத்தை தீர்த்துக்கொண்ட முதியவர் நீ என் பசியையும் தாகத்தையும் தீர்த்துவிட்டாய். ஆனால் இப்போது உன் மீது காதல் மோகம் வந்துவிட்டது. நீ மட்டும் என்னை மணந்தால், உலகம் உன்னைப் போற்றிப் புகழும்படி நான் உன்னை உயர்த்துவேன் என்றார்
இந்த வார்த்தையைக் கேட்ட வள்ளிக்குக் கோபம் வந்தது. தபம் புரிய வேண்டிய இந்த தள்ளாத வயதில் உங்களைப் போன்றவர்கள் இப்படிப் பேசுவது நியாயமில்லை. என் குலத்தில் யாருக்காவது நீங்கள் பேசுவது தெரிந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் இன்னும் கோபப்படுமுன் இங்கிருந்து போய்விடு என கடுமையாக பேசிவிட்டு காவல் காக்க தினைப் பயிரை நோக்கி நடந்தாள். வள்ளியை எப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணிய முருகப்பெருமான் வேறு வழியின்றி தனது அண்ணனான விநாயகப் பெருமானை வேண்டினார். விநாயகர் தம்பியின் காதலுக்காக முருகனின் திட்டப்படி யானையாக மாறி வள்ளியை துரத்தினர். யானையைக் கண்டு அஞ்சிய வள்ளி முதியவரை நோக்கி ஓடிவந்து யானையிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று அவள் கண்களை மார்பில் மூடிக்கொண்டு தஞ்சம் புகுந்தாள்.
அதைப் பார்த்ததும் யானை ஓடிப்போய் காட்டுக்குள் மறைந்தது. வள்ளி கண் விழித்த போது முதியவர் தோற்றத்தை மாற்றி முருகப்பெருமான் அழகாய் நின்றிருந்தார். தங்கள் குல தெய்வமாக வழிபடும் முருகப்பெருமானைப் பார்த்து வணங்கினாள் வள்ளி. அவள் முன் பிறப்பைத் தெரிவித்த முருகன் மறுநாள் வருவதாகக் கூறி அங்கிருந்து மறைந்தார்.
சொன்னபடியே மறுநாள் முருகப்பெருமான் வந்தார். வள்ளியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது வள்ளியின் தந்தை நம்பிராஜனும் வேடர்களும் அங்கு வந்தனர். முருகப்பெருமானை சாதாரண மனித உருவில் கண்டு ஆத்திரமடைந்தனர். அவனைப் பிடித்து அடித்துக் கொல்லுங்கள் என்று கட்டளையிட்டார் நம்பிராஜன்.
முருகப் பெருமானுக்கும் வேடர்களுக்கும் போர் நடந்தது. வேடர்கள் முருகப்பெருமானை நோக்கி அம்புகளையும் ஈட்டியையும் எறிந்தார்கள் முருகப்பெருமானை நோக்கி வந்த அனைத்து ஆயுதங்களும் முருகனின் ஒரு கை அசைவில் அவரைத் தொடுவதற்குள் கீழே விழுந்தன. முருகப் பெருமான் மீண்டும் கையை அசைத்த போது அனைத்து வேடர்களும் இறந்தனர். தனது அண்ணன்மார்களும் தன் குல வேடர்களும் இறந்து போனதைக் கண்டு வள்ளி வருந்தினாள்.
அப்போது அங்குவந்த நாரதர் சுவாமி வள்ளியின் மனம்வருத்தத்தை தீர்த்தருள வேண்டினர் அதன்படி இறந்த வேடர்களை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தார் முருகப் பெருமான். பின் நம்பிராஜனுக்கும் வேடர்களுக்கும் தனது சுயரூபத்தை காட்டி ஆசி வழங்கினார் முருகப்பெருமான். முருகப்பெருமானின் அழகிய காட்சியைக் கண்டு தங்களது குல கடவுளான முருகன் நேரில் வந்ததை எண்ணி மகிழ்ந்து அனைவரும் இரு கை கூப்பி வணங்கினர். இந்நிலையில் நாரதர் வள்ளியின் முன் பிறவியில் வாங்கிய வரத்தையும் வள்ளியின் பிறப்பையும் விளக்கினார். அதன்படி நம்பிராஜன் முருகப்பெருமானையும் வள்ளியையும் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று முறைப்படி திருமணம் செய்து வைத்தார்.